May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்

1 min read

Srirangam Temple Chithirai Therottam

29.4.2022
ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது.

ஸ்ரீரங்கம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க கருடன், யாழி, கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து 7 ஆம் திருநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருவிகையில் நெல்லளவு கண்டருளினார். அதன் பிறகு ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறையை அடைந்தார்.

8-ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்க விலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்க விலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு 5.15 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் மேஷ லக்னத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.