மாராட்டிய மாநிலத்தில் நெருக்கடி: சிவசேனாவின் சட்டமன்ற கட்சி தலைவராகிறார் அஜய் சவுத்ரி
1 min read
Crisis in Maratha state: Ajay Chaudhary becomes Shiv Sena assembly party leader
24/6/2022
சிவசேனாவின் சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ. அஜய் சவுத்ரியை நியமிக்க துணை சபாநாயகர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
சிவசேனா
மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. எனினும், இந்த மூன்று கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் பூசல் எழுந்தபடியே இருந்தது. கூட்டணியில் இருந்து கொண்டே சிவசேனாவுக்கு எதிரான வேலையில் கூட்டணியினர் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சிவசேனா அவ்வப்போது வெளிப்படுத்தி, அதிருப்தியும் தெரிவித்தது.
காங்கிரஸ் கட்சியை, தேசியவாத காங்கிரஸ் முதுகில் குத்துகிறது என காங்கிரசின் நானா பட்டோலே கடந்த மே மாதம் குற்றச்சாட்டாக கூறினார். இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த மேல்சபைக்கான தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதில், கட்சி மாறி ஓட்டு போட்டது இதற்கு காரணம் என்ற சந்தேகம் நிலவியது. அதற்கேற்ப, சிவசேனா தலைவர்களில் ஒருவரான மற்றும் மராட்டிய அமைச்சரவையில் மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சென்று விட்டனர்.
சட்டசபை கட்சி தலைவர்
இந்த சர்ச்சையால் கடந்த சில நாட்களாக மராட்டிய அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து, மராட்டிய சட்டசபை கட்சி தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா நீக்கியது. அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள ரேடிசன் புளூ ஓட்டலில் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக தங்கி உள்ளனர். மராட்டியத்தில் ஆளும் சிவசேனாவின் 35 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் என மொத்தம் 42 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒன்றாக உள்ள குழு புகைப்படமும் வெளியானது.
இதனை தொடர்ந்து, மராட்டிய சட்டசபை துணை சபாநாயகர் நர்ஹாரி ஜிர்வாலை கடந்த சில தினங்களுக்கு முன் சிவசேனா தலைவர்கள் நேரில் சந்தித்தனர். அவர்கள், மராட்டிய சட்டசபை கட்சி தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் ஒன்றை அவரிடம் வழங்கினர்.
அஜய் சவுத்ரி
ஷிண்டேவுக்கு பதிலாக அஜய் சவுத்ரியை அந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேபோன்று, முதல்-மந்திரி விடுத்த அழைப்பினை ஏற்று கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி துணை சபாநாயகருக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது. எதிரணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படியும் சிவசேனா கடிதத்தில் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், கூடுதலாக 2 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே அணியில் சேர்ந்து உள்ளனர். இந்த சூழலில், மராட்டிய சட்டமன்றத்தில் சிவசேனா கட்சி தலைவராக எம்.எல்.ஏ. அஜய் சவுத்ரியை நியமிப்பதற்கான சிவசேனாவின் கோரிக்கையை மராட்டிய சட்டமன்ற துணை சபாநாயகர் ஏற்று கொண்டு அதற்கான ஒப்புதலை இன்று அளித்து உள்ளார். இதற்கான கடிதம் ஒன்று துணை சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து சிவசேனா கட்சி செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.