அதிகாரி மேஜையில் தெரு நாய்களை விட்டு போராட்டம்
1 min read
Protest: Puppies left on official’s desk‘
17.9.2026
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் நிஃபாட் நகர்ப் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தெருநாய்களின் தொல்லை கடுமையாக அதிகரித்து வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ள நிலையில், தற்போதைய கணபதி விசர்ஜன விழாக் காலத்திலும் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நிஃபாட் நகர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த சிவசேனாவின் இளைஞர் அமைப்பான யுவசேனாவின் நாசிக் மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில் நிர்வாகிகள் வினோத போராட்டத்தைக் கையிலெடுத்தனர். நிஃபாட் நகர் பஞ்சாயத்து முதன்மை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலகத்திற்குச் சென்ற போராட்டக்காரர்கள், தாங்கள் சாக்கில் அடைத்து எடுத்து வந்த இரண்டு தெருநாய்க்குட்டிகளைப் பிரித்து, அதிகாரியின் அலுவலக மேஜை மீதே திறந்து விட்டனர். திடீரென மேஜை மீது விடப்பட்ட நாய்க்குட்டிகள் அங்குமிங்கும் ஓடி பதற்றத்துடன் காணப்பட்டன.
நாய்க்குட்டிகளை மேஜை மீது விட்டதோடு நிறுத்தாமல், அதிகாரி தீரஜ் பாம்ரேவின் மேஜை மீது ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை ஒன்றையும் வைத்து யுவசேனா தொண்டர்கள் தங்களுக்கெதிரான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நகராட்சிக் கட்டுப்பாடு இல்லாதது குறித்தும், வெறும் டெண்டர் நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி மக்கள் பிரச்சனைகளைப் புறக்கணிக்கும் நிர்வாகப் போக்கை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடி கருத்தடை முகாம்களை நடத்த வேண்டும், நாய்களைப் பிடிக்கும் முறையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களைத் திரட்டி மீண்டும் அதிகாரியின் அறையிலேயே தெருநாய்களை விட்டுப் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று விக்ரம் ரந்தாவே எச்சரித்துள்ளார். அரசு அலுவலகத்தில் தெருநாய்களை விட்டு அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.