டாஸ்மாக் பார்களில் உணவகங்களுக்கு அனுமதி -அமைச்சர் விக்னேஷ் தகவல்
1 min read
Permission granted for eateries in TASMAC bars – Minister Vignesh‘17.9.2026
“டாஸ்மாக் பார்களில் உணவகங்களுக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.தமிழகத்தில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் உள்ளன. இக்கடைகள் மூலம் அரசுக்கு தினமும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்து வருகிறது. அதேநேரம், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து இயங்கும் பல பார்கள் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுவதாக, நீண்ட காலமாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களின் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல, உணவகத்துடன் இணைந்து மதுபானம் வழங்கும் ‘ரெஸ்டோ பார்’ முறையை தமிழகத்திலும் அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய கல்விக் கடன் முகாம், பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்குக் கல்விக் கடன்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் பார்களில் உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது;-
மதுபான நிறுவனங்களிடம் மது வாங்குவதற்கு இவ்வளவு காலமாக அனுமதி கொடுத்தது கடந்த கால ஆட்சியாளர்கள்தான். அதை நிறுத்துவது என்றால் முழுமையாக நிறுத்த வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்து 120 நாட்கள்தான் ஆகியிருக்கின்றன; இன்னும் 1400 நாட்களுக்கு மேல் இருக்கின்றன. இதை மறுசீரமைப்பு செய்வோம், மாற்றங்கள் நிறைய வரும்.
டாஸ்மாக் துறையைச் சம்பாதிப்பதற்காகவே கடந்த ஆட்சியாளர்கள் வைத்திருந்தார்கள். டாஸ்மாக் துறை அமைச்சராக இருந்தாலும் சரி, நிர்வாகக் குழுவாக இருந்தாலும் சரி, ‘Money mind’ ஆகவே பார்க்கின்றனர். இவர்கள் நிறைய பணம் வைத்திருப்பார்கள், கேட்டால் கொடுப்பார்கள் என்று எழுதுகின்றனர். இதை முழுமையாக மாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். மாற்றுவது என்பது தரம் உயர்த்துவது கிடையாது; போதையில்லாத் தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்களின் இலக்கு.
“கோவையில் FL2 பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. FL2 பார் மீது நடவடிக்கை என்றால் அவர்களை முதலில் 30 நாட்கள், 60 நாட்கள் என சஸ்பெண்ட் செய்து விடுவார்கள்; அதன்பின் பார்களைத் திறந்து விடுவார்கள். மீண்டும் அங்கு விதிமுறைகள் மீறப்பட்டால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். FL2 பார்களைச் சம்பாதிக்கவே கொண்டு வந்திருக்கின்றனர். FL1 அரசு மதுபானக் கடைகளை முறைப்படுத்திய பின்னர், அடுத்தகட்டமாக FL2 மீதுதான் எனது பார்வை இருக்கும். ஆனால், இப்போது என்னுடைய கையில் அதிகாரம் இருக்கிறது. தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் இருக்கும்போதே இதைச் சரிசெய்து விடுவோம்.
டாஸ்மாக் பார்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவது குறித்த கேள்விக்கு, ‘டாஸ்மாக் பார் டெண்டர் ஒரு மாதத்தில் வந்துவிடும். அதில் உணவகங்களும் நடத்திக் கொள்ளலாம் எனக் கொண்டு வருகிறோம். அப்போதுதான் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை வைத்து ஆய்வுகளும் நடவடிக்கைகளும் எடுக்க முடியும். அப்போது தரமற்ற உணவுப் பொருட்களை மதுக்கூடத்தில் விற்பது சரியாகிவிடும்’ என்று தெரிவித்தார்.
மேலும், விரைவில் தமிழக முதல்-அமைச்சர் கோவைக்கு வருகை தருவார் என்றும் அவர் கூறினார்.