April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

60 வயதுக்கு மேல்… சில முன் எச்சரிக்கைகள்

1 min read
Over 60… some caveats

60 வயதுக்கு மேல்… சில முன் எச்சரிக்கைகள்

சுவற்றில் ஒட்டடை அடிக்கிறேன், ஆணி அடிக்கிறேன், மேலே அலமாரியில், பரணில் ஏதோ தேடி எடுக்கிறேன் என்று ஒரு நாற்காலி, ஸ்டூல் மேலே ஏறினால் கீழே விழ நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாய்ப்பு அதிகம். கால்களை நம்பாதீர்கள். அப்புறம் எதிலும் ஏற முடியாது. ஜாக்கிரதை.

மாடிப்படி ஏறும்போது கைப்பிடியை பிடித்துக்கொண்டு ஒவ்வொரு படியிலும் ரெண்டு காலை வைத்து ஏறுங்கள். மேலே பார்க்காமல் படியை ஒவ்வொன்றாக பார்த்து நடுப்படியில் காலை வையுங்கள். ஓரத்தில் வேண்டாம்.

டக்கென்று பின்னால் திரும்பி பார்க்காதீர்கள். அந்த காலம் மலையேறிவிட்டது. உடம்பையே திருப்பி பாருங்கள் அல்லது மெதுவாக தலையை திருப்புங்கள். டாக்டர் காத்திருக்கிறார் எப்போது நீங்கள் வருவீர்கள் என்று. ஜாக்கிரதை.

பெரிய கால் நகத்தையோ, ஐந்து விரலும் இருக்கிறதா என்று சோதிக்கவோ, உடனே குனிந்து பார்க்க என்ன அவசரம்? . மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குனியுங்கள். குப்புற தள்ளிவிடும். ஜாக்கிரதை.

உள் ஆடை, பேண்ட் அணிகிறேன் என்று நின்றுகொண்டே ஒரு காலை தூக்காதீர்கள். உங்களை தூக்க ஆள் வேண்டியிருக்கும். எங்காவது சௌகர்யமாக உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு காலாக நுழைத்துக் கொள்ளுங்கள் .

மல்லாக்க படுத்து அப்படியே ஸ்ப்ரிங் மாதிரி எழுந்திருக்காதீர்கள். இடதோ வலதோ பக்கம் திரும்பி மெதுவாக படுக்கையை விடுங்கள்.

சினிமாவில், டிவியில் வாட்ஸாப்ப் முகநூலில் யாரோ செயகிறார்களே என்று உடல் பயிற்சி செய்கிறேன் என்று கையை காலை உடம்பை திருகி முறுக்கிக் கொள்ளாதீர்கள். இப்போது உங்கள் எலும்புகள் பிஸ்கட் பாக்கெட் போல நொறுங்கிவிடும். உங்கள் பர்ஸ் சுளுக்கெடுத்துவிடும் ஜாக்கிரதை.
பக்கெட்டில் தண்ணீர் பிடிக்கிறேன் என்று இடுப்பு குனிய கனமான வஸ்துவை தூக்காதீர்கள். முழங்காலை மடக்கி தூக்க முடிந்தால் நீங்கள் கெட்டிக்காரர். பிழைக்க தெரிந்தவர்.

நீங்கள் தான் ஆபிசுக்கு , வேலைக்கு இப்போது போக வேண்டாமே . எந்த பஸ், ட்ரெயின் பிடிக்க விருட்டென்று படுக்கையை விட்டு எழுந்து ஓடுகிறாய்? ஐந்தாறு நிமிஷங்கள் அப்படி இப்படி புரண்டு விட்டு ஒருபக்கமாக மெதுவாக எழுந்திருங்கள்.

இத்தனை வருஷம் பிறருக்காக உழைத்த நீங்கள் இனி உங்களுக்காக எஞ்சிய சில வருஷங்களை வாழ முயற்சி செய்யுங்கள். பரோபகாரமாக ஏதாவது தினமும் செய்யுங்கள்.

கடைசியாக ஒரே ஒரு வார்த்தை. நீங்கள் ஆரோக்யமாக இருப்பதாகவே உங்களை உணர்ந்துகொண்டு செயல்படுங்கள்… வாழும் வரை அற்புதமாக வாழ்வோம் !”

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.