April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் தலைவர் தேர்தல் ராகுல் காந்திக்கு எதிராக சசி தரூர் போட்டி

1 min read

Sasi Tharoor vs Rahul Gandhi for Congress President Election

30.8.2022
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிடக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

காங். தலைவர் தேர்தல்

காங்கிரஸ்,தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்றும், அதன் முடிவுகள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. மேலும் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிடக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.தனது ஆதரவுக்காக மாநில கட்சித் தலைவர்களை சசிதரூர் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளார். இதனிடையே, செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், ஆனால் தேர்தல் தொடர்பான தமது கட்டுரையை ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக மலையாள நாளிதழ் மாத்ருபூமியில் அவர் எழுதியிருந்த கட்டுரை தற்போது புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது. அந்த கட்டுரையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு முன்பாக, அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களை நடத்தியிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்கிலாந்தின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தேர்தலை, காங்கிரஸ் தலைவர் தேர்தலுடன் அவர் ஒப்பீடு செய்துள்ளார். கடந்த 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் தெரசா மேக்கு பதிலாக ஒரு டஜன் வேட்பாளர்கள் போட்டியிட்டதை உலகம் கண்டது என்றும், அதில் போரிஸ் ஜான்சன் முதலிடம் பிடித்தார் என்றும் சசிதரூர் கூறியுள்ளார்.
இது போன்ற சூழல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் உருவானால் அது கட்சியின் மீது தேசிய வாக்காளர்கள் இடையே ஆர்வத்தை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும். புதிய தலைவரை தேர்வு செய்வது கட்சி மறுமலர்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த கட்சியும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அதனால் மிக அவசரமாக நிரப்பப்பட வேண்டிய பதவி என்பது காங்கிரஸ் தலைவர் பதவி என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.