உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; 3 பேர் தமிழர்கள்
1 min read
7 killed in Uttarakhand helicopter crash; 3 are Tamils
18.10.2022-
உத்தரகாண்டில் தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் தமிழர்கள்.
ஹெலிகாப்டர்
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று மதியம் 12.15 மணியளவில் பயணம் மேற்கொண்டது. அந்த ஹெலிகாப்டரில் 7 பேர் பயணித்தனர். கேதார்நாத்தின் காட் ஷடி என்ற மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
3 தமிழர்கள்
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா,சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. மீதி 2 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.