May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்

1 min read

Surasamharam in Tiruchendur

30.10.2022
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

சூரசம்ஹாரம்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இந்நிலையில் மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார்.

வதம்

இந்த நிகழ்ச்சியில் யானை முகமாகவும், சிங்க முகமாகவும் அடுத்தடுத்து உருமாறி போரிடும் சூரபத்மனை முருகபெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மேற்பார்வையில் சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.