May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்

1 min read

Certificate of Appreciation by Chief Minister M.K.Stal to policemen who performed well in the Coimbatore car blast incident

31.10.2022
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கார் வெடிப்பு

கோவை மாநகரில் கடந்த 23.10.2022 அன்று அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தினையடுத்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டுவிடாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த அன்று அதிகாலை வேளையில் அப்பகுதியில் விழிப்புடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைக் கண்டவுடன் ஜமேஷா முபினால் மேலும் அவ்வழியே தொடர்ந்து காரைச் செலுத்த இயலவில்லை.
இதனைத் தொடர்ந்து அவ்விடத்திலேயே கார் சிலிண்டர் வெடித்து அவரும் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் காரணமாகவும், காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்றியதன் காரணமாகவும் பெரும் அசம்பாவிதம் கோவை மாநகரில் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு சில நபர்கள் உள்நோக்கத்துடன் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக தடுக்கப்பட்டு, தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு நிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் நிலைமை திறம்பட கையாளப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் தனிப்படைகள் மூலம் புலன் விசாரணை முடுக்கிவிடப்பட்டு 148 தடயங்கள் சேகரிக்கப்பட்டு, வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் 24.10.2022 அன்றே கைது செய்யப்பட்டனர். மறுநாள் ஆறாவது நபரும் கைது செய்யப்பட்டார். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கைகள் அடுத்த தினமே (25.10.2022) மேற்கொள்ளப்பட்டன.

பாராட்டு

இரவும் பகலும் ஓய்வின்றி தன்னலமற்ற வகையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறையினரின் பணி போற்றத்தக்கதாகும். அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி சமூக அமைதியை நிலைநாட்டும் வண்ணம் சேவையாற்றிய காவல்துறையினரின் இப்பணியைப் பாராட்டி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 58 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.