August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

குஜராத் சட்டசபை தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பு

1 min read

Gujarat Assembly Election Election Date Notification

3.11.2022
குஜராத் சட்டசபை தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5 ந்தேதிகளில் என 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத் தேர்தல்

இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் இலாச்சலப் பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17-ல் தொடங்கி அக்டோபர் 25-ல் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரீசீலனை அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தேதி அறிவிப்பு

குஜராத்தி்ல் தற்போது பாரதீயஜனதா ஆட்சி நடந்து வருகிறது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் 2023 பிப்ரவரி மாதம் 18ம் தேதி முடிவடைகிறது. அதற்குள் புதிய மந்திரிசபை பதவி ஏற்க வேண்டும்.

இந்த நிலையில் இன்று குஜராத்சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நிருபர்களை சந்தித்து இதனை அறிவித்தார். அங்கு டிசம்பர் 1 மற்றும் 5ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இமாச்சலபிரதேசத்தைப்போலவே இங்கும் டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்காளர்கள்

குஜராத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.53 கோடி; பெண் வாக்காளர்கள் 2.37 கோடி. மூன்றாம் பாலினம்: 1,41.
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், திருநங்கைகளின் எண்ணிக்கை 100 அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 44,904 மூன்றாம் பாலின வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள்

தேர்தலுக்காக மொத்தம் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் கிராமப்புறங்களில் 34,000 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமையும்.மேம்பட்ட வாக்களிக்கும் அனுபவத்திற்காக, 1274 வாக்குச் சாவடிகள் பெண்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களால் முழுமையாக நிர்வகிக்கப்படும். 182 வாக்குச் சாவடிகளில் பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்படும். முதல் முறையாக, 33 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் இவை இளம் வாக்குச்சாவடி ஊழியர்களால் நிர்வகிக்கப்படும்.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பெண்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பார்வையாளர் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் ஈடுபடுத்தப்படுவார்.

மோடியின் மாநிலம்

குஜராத் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமாகும். இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. பிரதான எதிர்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே தீவிர போட்டி இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் குஜராத் தேர்தலில் மும்முனை போட்டியை எதிர்பார்க்கலாம்.
டெல்லி, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி தில்லி மாடல் அரசு என்ற கோஷத்தை முன்னெடுத்து இப்போது களத்தில் இறங்கியுள்ளது.

ராகுல்காந்தி

சமீபத்தில் குஜராத் சென்ற காங்கிரஸ் எம்பி, ராகுல் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். குறிப்பாக, குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், விவசாயிகளுக்கு மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும், மாதம்தோறும் பொதுமக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும், ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும், ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சமையல் எரிவாயு ரூ.500-க்கு விற்கப்படும் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அவர் அளித்திருந்தார்.

பாலம் விபத்து

இந்த தேர்தல் பாஜகவுக்கு அக்னிப்பரீட்சையாகத்தான் இருக்கும். அங்க மோர்பியில் சமீபத்தில் தொங்கு பாலம் இடிந்து 141 பேர் இறந்த நிலையில், பாரதீய ஜனதா மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றன.
நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், பால விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியப்பின்னர் செய்தியாளர்களிடம் தனது உரையாடலைத் தொடங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *