August 4, 2026

Seithi Saral

Tamil News Channel

உலகின் இளம் பேராசிரியர் நேத்தன் தாமஸ்- 306 ஆண்டுகால உலக சாதனை முறியடித்தார்

1 min read

Nathan Thomas, the world’s youngest professor, breaks a 306-year-old world record.

4/8/2026
பள்ளி முடித்து கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்றே குழம்பும் இளைஞர்களுக்கு மத்தியில் 18 வயதில் அமெரிக்காவில் ஒரு இளைஞர் கல்லூரி பேராசிரியராக மாறி சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த அந்த வாலிபர் பெயர் நேத்தன் தாமஸ்.

கின்னஸ் உலக சாதனை அமைப்பு, உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற பட்டத்தை நேத்தன் தாமஸுக்கு வழங்கியுள்ளது.
1717ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல கணிதவியலாளர் காலின் மேக்லரின் தனது 19வது வயதில் பேராசிரியராக பொறுப்பேற்றதே முந்தைய சாதனையாக இருந்தது.

306 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த உலக சாதனையை, நேத்தன் தாமஸ் தனது 18 வயதில், ஆகஸ்ட் 2023இல் மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராக இணைந்ததன் மூலம் முறியடித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டில் 18 வயதில் உலகின் மிக இளம் வயது பெண் பேராசிரியராக சாதனை படைத்த அலியா சாபூரை விட நேத்தன் 16 நாட்கள் இளையவர் ஆவார். இதன்மூலம் ஆண்-பெண் என இருபாலரிலும் உலகின் இளம் பேராசிரியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் தாமஸ்.

தற்போது கின்னஸ் அங்கீகாரத்தின் மூலம் அவரின் சாதனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நேத்தன் தனது 10 வயதிலேயே மியாமி டேட் கல்லூரியில் பள்ளிப் படிப்புடன் சேர்த்து கல்லூரிப் படிப்பையும் தொடங்கினார்.

14வது வயதில் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்திற்கு மாறினார். மின் பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு பட்டங்களையும் 18 வயதிற்குள் நிறைவு செய்தார்.

2023 ஆகஸ்ட் மாதம், மியாமி டேட் கல்லூரியில் பொறியாளர்களுக்கான சி-ப்ரோக்ராமிங் பாட ஆசிரியராக அவர் இணைந்தார்.

வகுப்பறையில் இருந்த பெரும்பாலான மாணவர்கள் அவரது வயதை ஒத்தவர்களாகவோ அல்லது அவரை விட மூத்தவர்களாகவோ இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *