புதுச்சேரி: நீட் தரவரிசை பட்டியலில் நெகட்டிவ் மார்க் வாங்கியவர்களும் இடம்பெற்றனர்
1 min read
Puducherry: Candidates who secured negative marks also featured in the NEET rank list
4/8/2026
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை புதுச்சேரி சுகாதார துறை வெளியிட்டுள்ளது.
நாடு முழுதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ‘நீட்’ நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அவ்வகையில் நடப்பாண்டுக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின்னர் மாநிலங்களுக்கான 85 சதவீத ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புதுச்சேரி மாநில 85% ஒதுக்கீட்டிற்கான நீட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 5,402 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். மாணவர் கிரிஷாந்த் அபினவ் 670 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் அகில அளவில் 553-வது இடத்தை பிடித்துள்ளார். மாணவர்கள் பிரவீன், ரமணீஷ்வர் ஆகியோர் தலா 646 மதிப்பெண்கள் பெற்று முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர். இவர்கள் அகில இந்திய அளவில் முறையே 1721 மற்றும் 1756வது இடங்களை பிடித்துள்ளனர். மாநில அளவில் 600 மற்றும் அதற்கு மேல் 13 பேர் எடுத்துள்ளனர். இவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லுாரிகளில் எளிதில் சீட் கிடைக்கும்.
புதுச்சேரி மாநில தரவரிசைப் பட்டியலில், விண்ணப்பதாரர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, -1 முதல் -23 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதன் மூலம் இவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு உறுதியாகிவிடாது என்றாலும், இத்தகைய மதிப்பெண்களைப் பெற்றவர்கள் பட்டியலில் இருப்பது மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் மொத்தம் 10 பேர் -1, -3, -6, -7, -9, -11, -14, -15, -16 மற்றும் -23 என நெகட்டிவ் மார்க் பெற்றுள்ளனர். இவர்கள் 4707 முதல் 4716 வரையிலான தரவரிசை இடங்களில் உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் படிப்பதற்காக வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவதாகவும், இதனால் மாநில மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிபோவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எனவே, தகுதியான உள்ளூர் மாணவர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்வதற்காக, சுகாதாரத்துறை இந்த முறை ஆட்சேபனை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, நீட் தேர்ச்சி பட்டியலில் ஏதேனும் முறைகேடுகள், பிற மாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது தகுதி தொடர்பான வேறு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் ஆட்சேபனைகள் இருந்தாலோ, அது குறித்து உரிய ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை புகார்கள் தெரிவிக்கலாம். புகார்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக அளிக்க வேண்டும்.
நீட் கலந்தாய்விற்கான பதிவு இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. சாய்ஸ் பில்லிங் பதிவு செய்யும் நடைமுறை ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி, 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான அறிவிப்பு 17-ம் தேதி வெளியாகும். இடம் ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர் சேர்க்கையை உறுதி செய்யவேண்டும்.
மாநில தரவரிசை பட்டியல் தொடர்பான கூடுதல் விவரங்களை, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் சேவைகள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.