May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

ஜல்லிக்கட்டில் விதிமீறல் நடைபெறுவதாக தெரியவில்லை- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து

1 min read

Bulls are treated as members of the family, there is no violation in Jallikattu – Supreme Court judges opined

30.11.2022
ஜல்லிக்கட்டு காளைகளை குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர் என்றும் அதில் விதிமீறல் நடைபெறவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி

சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் பீட்டா அமைப்பு சார்பில் வக்கீல் சியாம் திவான் ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடுகையில், ‘பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்காக தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இழைக்கப்படும் கொடூரம்’ என்றார்.
இந்த நீதிமன்றம் முன்னர் ஜல்லிக்கட்டில் இருக்கும் நடைமுறைகளை கொடூரம் என்றதே தவிர, ஜல்லிக்கட்டு விளையாட்டே கொடூரமானது என கூறவில்லை. மேலும் தற்போது ஜல்லிக்கட்டுக்கென சட்டம் உள்ளது. உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது. மேலும் தற்போது மனுதாரர் தரப்பு பல்வேறு விதிமீறல் அறிக்கைகளை சமர்பிக்கிறீர்கள். இது விதிமுறைகளை முறையாக கட்டாயம் அமல்படுத்துவதில் ஏற்பட்ட தவறு மட்டுமே.
மேலும், ஜல்லிக்கட்டு காளைகள் என்பது திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை அதற்கான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவைதானே பயன்படுத்தப்படுகிறது. நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது. அதை துன்புறுத்தலாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா? இதற்காக நாய்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவை தானே பயன்படுத்தப்படுகிறது.
போட்டிகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுதல் போன்றவை எல்லாம் தான் விலங்குகள் துன்புறுத்தலாக இருக்க முடியும். ஆனால், 1000 ஆண்டுகளாக காளைகளை வைத்து இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தபோட்டிக்காக காளைகள் தனியாக பழக்கப்பட்டு வருகின்றன.

விதிமுறை மீறல் இல்லை

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாக பயிற்சி அளிப்பதோடு, அந்த காளைகளை தங்கள் சொந்த குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர். ஆனால் காளைகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மேலும் தற்போது அவ்வாறான எந்த விதிமீறலும் நடைபெறுவதாக தெரியவில்லை. மேலும் இந்த போட்டிகளுக்கான விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதால் அதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். மேலும், ஜல்லிக்கட்டு நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது அல்ல.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

அதற்கு பீட்டா அமைப்பு சார்பில் வாதாடிய வக்கீல், “ஏற்கனவே இந்த நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் ஒரு பழக்கத்தை காட்டு மிராண்டித்தனம் என அறிவித்துவிட்டதால், அதனை மீண்டும் இந்த நீதிமன்றம் மாற்றி அமைக்கக் கூடாது” என்றார்
இவ்வாறு விவாதம் நடந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.