நாட்டின் நீண்டகால பிரதமராக இருப்பேன் என கற்பனை கூட செய்ததில்லை : பிரதமர் மோடி
1 min read
I never even imagined I would be the country’s long-serving Prime Minister: Prime Minister Modi
10/6/2026
நாட்டின் நீண்ட கால பிரதமராக இருப்பேன் என கற்பனை கூட செய்ததில்லை என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 10) தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் விதமாக தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று (ஜூன் 10) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மருத்துவத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சஞ்சய் ஜா, சிவசேனை கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சிராக் பஸ்வான், ஜனசக்தி கட்சியின் தலைவர் பவன் கல்யாண், ஜித்தன் ராம் மாஞ்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி. குமாரசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
”இந்த நாளை உண்மையாகவே நினைவில் நிற்கும் நாளாக நீங்கள் மாற்றியுள்ளீர்கள். நான் நெகிழ்ச்சியுடனும் நன்றியுடன் உணர்கிறேன். இந்த அரசியல் பயணத்தில் பல்வேறு மேடு பள்ளங்கள் இருந்துள்ளன. இந்த மைல்கல் ஒருநாள் எடப்படும் என ஒருநாளும் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. மிக நீண்டகால பிரதமராகப் பதவி வகித்து நாட்டிற்கு சேவையாற்றும் வாய்ப்பை எனக்கான சிறப்புரிமையாகக் கருதுகிறேன்.
தாய் நாட்டிற்கு நீண்ட காலமாக பதவியில் இருந்து சேவைபுரிவது பெருமைவாய்ந்த தருணம். கடவுளின் சிறப்பு ஆசிர்வாதத்தால் மட்டுமே இது சாத்தியம். மக்களே கடவுளின் அவதாரமாக எனக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளனர். அதனால்தான் இந்த சேவையை ஆன்மிக பயிற்சியாக மட்டுமே பார்க்கிறேன்.
இந்த ஆன்மிக பயிற்சி ஒருபோதும் தனிப்பட்டதாக இருந்ததில்லை. யாகங்களின் ஒருங்கிணைப்பாக இதனைப் பார்க்கிறேன். இதற்கு நீங்கள் (அரங்கில் பங்கேற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள்) உள்பட பலர் பங்களித்துள்ளீர்கள்.
இந்தப் பயணத்தில் உடன் பயணித்த அனைவருக்கும் என் நன்றியுணர்வை தெரிவித்துக்கொள்கிறேன். இது தனிப்பட்ட முறையிலான சாதனை மட்டும் அல்ல. உங்கள் தாராள மனப்பான்மை இதில் பிரதிபலிக்கிறது.
எல்லா வகையிலும் இது நமது கூட்டுச் சாதனையாகும். என்.டி.ஏ.-வில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் இது ஒரு பொதுவான வெற்றியாகும். எனவே, இந்தத் தீர்மானத்தை உங்கள் அனைவருக்கும், பாஜகவினர் உட்பட நமது என்.டி.ஏ. குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தொண்டருக்கும், நான் அர்ப்பணிக்கிறேன். இந்திய மக்களின் இயல்பான ஞானம் எப்போதும் வியக்கத்தக்கதாகவே இருந்து வருகிறது.
காங்கிரஸின் துரோகத்திற்குப் பிறகு, நாட்டு மக்கள் தங்கள் நம்பிக்கையை எங்கள் மீது வைத்தனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி, குடும்பமாக நாட்டின் அந்த நம்பிக்கையை நாங்கள் என்றென்றும் வலுப்படுத்தியுள்ளோம் என்பதில் இன்று நான் மனநிறைவும் பெருமிதமும் கொள்கிறேன்.
சரியான நோக்கங்களுடன் ஒரு அரசாங்கம் நடத்தப்படும்போது, வளர்ச்சியும் மிக விரைவாக நிகழ்கிறது என்பதை இந்திய மக்கள் முதன்முறையாகக் கண்டுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த 12 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருப்பது, எங்கள் கொள்கைகளும் நாங்கள் பயணிக்கும் திசையும் சரியானவை என்பதைக் காட்டுகிறது”
இவ்வாறு குறிப்பிட்டார்.