May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவின் தென்கோடி தீவின் அதிசயங்கள்/ ராமசாமி

1 min read

Wonders of India’s South Island By Ramasamy

18/12/2022
போட்டித்தேர்வுகளில் இந்தியாவின் தென்கோடி பகுதி எது என்று கேட்டால் பலர் கன்னியாகுமரி முனை என்று எழுதுவார்கள். இது தவறு. தென்கோடி பகுதி இந்திரா பாயிண்ட் என்பதுதான் சரியான பதில். அதாவது பூகோள அமைப்பின்படி பார்த்தால், குமரிமுனையை இந்தியாவின் தென்கோடி என்று சொல்ல முடியாது. பரந்து விரிந்த பிரதான இந்திய நிலப்பரப்பின் தென் எல்லைதான் குமரிமுனை. ஆனால் இந்தியாவின் உண்மையான தென்கோடி எல்லை என்பது ‘இந்திரா முனை’ (இந்திரா பாயிண்ட்) ஆகும்.
அது என்ன இந்திரா முனை? அது எங்கே இருக்கிறது?
வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாசலபிரதேசம் வரையிலான பிரதான நிலப்பரப்பை மட்டும் கொண்டது அல்ல இந்தியா. இந்தியாவுக்கு சொந்தமாக சிறியதும், பெரியதுமாக 1,382 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளையும் உள்ளடக்கியதுதான் இந்திய துணைக்கண்டம். இந்த தீவுகள் வங்கக்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் அமைந்துள்ளன.

அந்தமான்

வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 1,100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது யூனியன் பிரதேசமான அந்தமான்.
அந்தமான், நிக்கோபார் உள்ளிட்ட 572 தீவுகளை உள்ளடக்கியதுதான் அந்தமான். இந்த தீவுகள், ரொட்டித்துண்டை பிய்த்துப்போட்டது போல் வடக்கில் இருந்து தெற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டு கிடக்கின்றன. இவற்றில் 37 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். பெரும்பாலானவை குட்டிக்குட்டி தீவுகள் என்பதால் அங்கு மக்கள் வசிப்பதற்கான வசதிகள் எதுவும் இல்லை. இதனால் மனிதர்களின் நடமாட்டமே கிடையாது. அவ்வப்போது மீனவர்கள் மட்டும் சென்று வருவது உண்டு.
சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கும் அந்தமான் தீவுகள் நிர்வாக வசதிக்காக வடக்கு மற்றும் நடு அந்தமான், தெற்கு அந்தமான், நிக்கோபார் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், வங்காளி, நிக்கோபாரிஸ் ஆகிய மொழிகளை பேசுகிறார்கள். சில தீவுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்கள் மொழிகளில் பேசிக்கொள்கிறார்கள்.

இந்திரா பாயிண்ட்

1,045 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட, மலைக்காடுகள் நிறைந்த கிரேட் நிக்கோபார் தீவில் 9,440 பேர் வசிக்கிறார்கள். இங்குள்ள நிக்கோபார் மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் உள்ளது ‘இந்திரா பாயிண்ட்’ என அழைக்கப்படும் ‘இந்திரா முனை’. இதுதான் இந்தியாவின் உண்மையான தென்கோடி முனை ஆகும். குமரிமுனை பூமத்திய ரேகைக்கு வடக்கே 8.08 டிகிரி அட்சரேகையில் அமைந்துள்ளது. ஆனால் இந்திரா முனை பூமத்திய ரேகைக்கு வடக்கே 6.74 டிகிரி அட்சரேகையில் அமைந்து இருக்கிறது. அதாவது பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளது. கிட்டத்தட்ட கன்னியாகுமரிக்கு கிழக்கே இந்திரா முனை அமைந்து இருக்கிறது. கேம்பல் வளைகுடா தீவு பகுதியில் அமைந்திருக்கும் இந்த இந்திரா முனை இந்தியாவின் பிரதான நிலப்பரப்பை விட இந்தோனேசியாவுக்கு மிக அருகில் உள்ளது.

இந்திரா காந்தி

இங்கிருந்து இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு வெறும் 145 கி.மீ. தூரம்தான். இந்திய கடலோர காவல்படையின் பாதுகாப்பில் உள்ள இந்திரா முனை என்பது ஒரு குக்கிராமம் ஆகும். லட்சுமிநகர் பஞ்சாயத்தின் நிர்வாகத்தில் உள்ள இந்த கிராமம் முன்பு ‘பிக்மாலியன் முனை’ என்றும் ‘பார்சன்ஸ் பாயிண்ட்’ என்றும் அழைக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1984-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி இந்த இடத்துக்கு வந்தார். இதனால் அவரது வருகையை கவுரவிக்கும் வகையில் பிக்மாலியன் முனைக்கு ‘இந்திரா முனை’ என பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த புதிய பெயர் சூட்டும் விழா 1985-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி நடைபெற்றது. ஆனால் அப்போது இந்திராகாந்தி உயிருடன் இல்லை. 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி அவர் தனது பாதுகாவலர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்திராகாந்தியின் வருகையை நினைவுகூரும் வகையில், இந்திரா முனை பகுதியில் அவருக்கு சிலை ஒன்றும் நிறுவப்பட்டு உள்ளது.

27 பேர்

கடல் மட்டத்தில் இருந்து 47 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்திரா முனை பகுதியில் சுமார் 20 குடும்பத்தினர் வசித்து வந்தனர். மேலும் அங்கு 4 விஞ்ஞானிகளும் தங்கி இருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு இருந்தனர். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி இந்தோனேசியா அருகே கடலில் பூமிக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உருவான சுனாமி அலைகள் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை தாக்கியதில், பல்லாயிரக்கணக்கானோர் பலியானார்கள் அல்லவா? அப்போது அந்தமான்-நிக்கோபார் தீவுகளும் நாசமாயின. இந்திரா முனை பகுதியில் வசித்து வந்த 20 குடும்பத்தினரும், 4 விஞ்ஞானிகளும் இறந்துவிட்டனர். 4 வீடுகள் மட்டுமே தப்பின. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அங்கு வெறும் 27 பேர் மட்டுமே வசிக்கிறார்கள்.
சுனாமியின் காரணமாக இந்திரா முனை பகுதி 4.25 மீட்டர் கடலுக்குள் மூழ்கியது. ஆனால் பின்னர் படிப்படியாக நீர்மட்டம் குறைந்து நிலப்பகுதி வெளியே தெரிய தொடங்கியது. என்றாலும் பழைய நிலை முழுமையாக திரும்பவில்லை.
இதனால் நிலப்பகுதியில் இருந்த கலங்கரை விளக்கம் தற்போது தண்ணீருக்குள் நின்று கொண்டிருக்கிறது. கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு வழிகாட்டுவதற்காக வார்ப்பு இரும்பினால் உருவாக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் 35 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். வெள்ளை மற்றும் சிவப்பு வர்ணம் பூசப்பட்ட இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து வீசும் ஒளி 10 நாட்டிகல் மைல் (ஒரு நாட்டிகல் மைல் 1.85 கிலோ மீட்டருக்கு சமம்) தூரம் தெரியும். இந்த கலங்கரை விளக்கம் 1972-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி முதல் செயல்பட்டு வந்த போதிலும், 1973-ம் ஆண்டில்தான் அப்போதைய துணை ஜனாதிபதி ஜி.எஸ்.பதக், இதை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்திராகாந்தி இந்த தீவுக்கு வந்தபோது இந்த கலங்கரை விளக்கத்துக்கும் சென்று பார்வையிட்டார்.

சுற்றுலாத்தலம்

சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு சென்று அங்கிருந்து கேம்பல் வளைகுடாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லும் வசதி உள்ளது. போர்ட்பிளேரில் இருந்து படகு போக்குவரத்தும் உள்ளது. ‘பூஜ்ஜியம் முனை’ என்ற இடத்தில் இருந்து இந்திரா முனை வரை 56 கி.மீ. நீளத்துக்கு சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பகுதி பணிகள் முடிந்துவிட்டன. 110 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட கலேதியா தேசிய பூங்கா, கலங்கரை விளக்கம் ஆகியவை இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். இங்கு இந்திய சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவ்வப்போது சில சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
விவேகானந்தர் தியானம் செய்த இடம்

இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் குமரிமுனைக்கு வந்து அங்கு கடலில் உள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்தார். அந்த இடத்தில் அவரது பெயரில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி வந்து தியானம் செய்த அவர், பின்னர் கிரேட் நிக்கோபார் தீவு சென்று இந்திரா முனை பகுதியில் சில நாட்கள் தியானம் செய்து இருக்கிறார்.

அமெரிக்கரை கொன்ற பழங்குடியினர்

அந்தமானில் வடக்கு சென்டினல் உள்ளிட்ட சில தீவுகளில் வசிக்கும் பழங்குடியினர் மிகவும் பயங்கரமானவர்கள். வெளியுலக தொடர்பு இல்லாத அவர்கள் பிறரை தங்கள் தீவுக்குள் அனுமதிப்பது இல்லை. மீறி வந்தால் கோடாரியால் வெட்டியோ, அம்பு எய்தோ கொன்றுவிடுவார்கள். அந்தமான் தீவுகளில் வசிக்கும் பழங்குடியினர் பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் என்ற 27 வயது இளைஞர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி போர்ட்பிளேர் வந்தார். பல இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்த அவர் நவம்பர் 15-ந்தேதி, போர்ட்பிளேரில் இருந்து மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, பழங்குடியினர் மட்டுமே வசிக்கும் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்றார். படகில் அவரை அழைத்துச்சென்ற மீனவர்கள், அவரை அங்கு இறக்கி விட்டுவிட்டு திரும்பிவிட்டார்கள். கரையோரம் வந்த பழங்குடியினருக்கு, ஜான் ஆலன் சாவ் சில பரிசு பொருட்களை கொடுத்து, அவர்களுடன் நட்புடன் பழக முயன்றார். ஆனால் அவர்கள் அம்பு எய்து ஜான் ஆலன் சாவ்வை கொன்றுவிட்டார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் இந்திய கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் அங்கு சென்று அவரது உடலை மீட்க முயன்றனர். ஹெலிகாப்டரை பார்த்ததும் பழங்குடியினர் கூச்சலிட்டபடி அம்புகளை எய்ததால் தரையிறங்க முடியவில்லை. இதனால் ஜான் ஆலன் சாவ்வின் உடலைக்கூட மீட்க முடியவில்லை.

பிரச்சினைக்குரிய முனைகள்

இந்தியாவின் தென்கோடி முனையில் பிரச்சினை இல்லை என்ற போதிலும் வடக்கு மற்றும் கிழக்கு கோடி முனை எது என்பதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இதேபோல் மேற்கு முனையிலும் பிரச்சினை உள்ளது.
இந்தியாவின் வடகோடி முனை கில்ஜித்-பல்டிஸ்தான் எல்லையில் கரகோரம் மலைத்தொடரில் உள்ள கிலிக் கணவாய் ஆகும். இது லடாக் யூனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா உரிமை கோரி வந்த போதிலும், இந்த பகுதி பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருந்து வருகிறது.

லடாக்கின் வடகோடியில் உள்ள சியாச்சின் பனிமலை முகடு பகுதிதான் தற்போது இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ளது. ஆனால் இந்த இடம், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சுயாட்சி பிராந்தியத்துக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் கூறுகிறது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள 96 கி.மீ. நீள ‘சர் கிரீக்’ இந்தியாவின் மேற்குகோடி முனையாக விளங்குகிறது. ‘சர் கிரீக்’ என்பது சிந்து நதி அரபிக்கடலில் கலக்கும் சதுப்புநில பகுதி ஆகும். இந்த சதுப்பு நிலம்தான் குஜராத்தையும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தையும் பிரிக்கிறது. இந்த சதுப்பு நிலத்தில் சில இடங்களில் எல்லையை பிரிக்க கம்பிவேலி போடப்பட்டு உள்ளது. இங்கும் எல்லை தகராறு இருந்து வருகிறது.
இந்தியாவின் கிழக்கு கோடி கடைசி முனை அருணாசலபிரதேசத்தின் அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற இடம் ஆகும். மியான்மர் நாட்டின் கச்சின் மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள இந்த இடம் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ளது. ஆனால் இந்த இடம் தங்கள் நாட்டுக்கு சொந்தமான இடம் என்று சீனா அடம் பிடிக்கிறது.
இந்த மாநிலத்தில் சங்லாங் மாவட்டத்தில் விஜயநகர் என்ற இடத்துக்கு கிழக்கே உள்ள சவுகான் கணவாய்தான் நடைமுறையில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இந்திய எல்லையாக கருதப்படுகிறது.
-எஸ்.ராமசாமி, சென்னை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.