தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Chance of heavy rain tomorrow in 8 districts of Tamil Nadu
24.12.2022
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனமழை
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் (24-12-2022) காலை 05:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோமீட்டர் கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக, 24.12.2022 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.12.2022 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26.12.2022 அன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27.12.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.