June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்; 30 பேர் கைது

1 min read

Impersonation in NEET re-exam in Bihar; 30 arrested.

22.6.2026
நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக பீகாரில் 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 22 லட்சம் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதி முடித்தனர். ஆனால் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவ-மாணவிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்தது என்ற புகார் எழுந்தது. வட மாநிலங்களில் வினாத்தாள் கசிந்தது தொடர்பான புகாரில், விசாரணை நடத்தப்பட்டு அது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, 22 லட்சம் பேர் எழுதியிருந்த நீட் தேர்வை மத்திய அரசு கடந்த மாதம் 12-ந்தேதி ரத்துசெய்து அறிவித்தது.

இதனை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் மறுதேர்வு நேற்று நடந்தது. இந்த நிலையில், நீட் மறுதேர்வின்போது பீகாரின் லகிசராய் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 9 பேர், தேர்வு எழுத வேண்டிய மற்றவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது. தேர்வு எழுதுவதற்காக சென்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 9 பேரில், 7 பேர் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும், ஒருவர் கே.ஆர்.கே. மேல்நிலை பள்ளியிலும், ஒருவர் ஹசன்பூர் பள்ளியிலுள்ள தேர்வு மையத்திலும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த தேர்வு மோசடியுடன் தொடர்பிலுள்ள வேறு 21 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த நெட்வொர்க்குடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து, வழக்கு தொடர்பாக ஒரு சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன. இதில், பலருக்கு தொடர்பு இருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விசாரணைக்கு பின்னர் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீட் தேர்வுக்காக மாணவ மாணவிகள் இரவு பகலாக பல நாட்களாக, மாதங்களாக படித்து தேர்வு எழுதி வரும் சூழலில், வடமாநிலங்களில் மீண்டும் இதுபோன்று தேர்வை கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும், மீண்டும் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *