ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min readCommittee to study demands of teachers- First Minister M. K. Stalin orders
1.1.2023
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
உண்ணாவிரதம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் உணவருந்தாமல், தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிக்கல்வி துறை செயலாளர் மற்றும் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல் அமைசர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குழு
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளரின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.