May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

ராமர் பாலம் வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம்

1 min read

Ram Palam case: Time for central government to file affidavit

12/1/2023
ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

ராமர் பாலம்

இந்தியா – இலங்கை இடையே தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடற்பகுதியில் மணல் திட்டுக்கள் உள்ளன. சுண்ணாம்பு கற்களால் உருவான இவை, ராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என கூறப்படுகிறது. ஆனால், இது வெறும் கற்பணை என்றும், இயற்கையாக உருவான மணல் திட்டுக்களே அவை என்றும் கூறப்படுகிறது. இது ராமர் பாலம் எனவும், ஆதாம் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.
இதற்கிடையே, ராமர் பாலம் குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது.

பாரம்பரிய சின்னம்

இந்த பின்னணியில், ராமர் பாலம் இந்துக்களின் அடையாளம், இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாக உள்ளதால், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரான பொது நல வழக்கையொட்டி, அவா் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீண்ட இடைவெளிக்கு பின்னரே விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், வழக்கு விசாரணைக்கு வராமல் நிலுவையில் இருந்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அறிவியல் பூர்வமாக ஆராயப்பட வேண்டும். நம்பிக்கை மற்றும் அடையாளம் என பல்வேறு விவரங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளதால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இடைக்கால மனு

இதனிடையே, ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்கக்கூடாது. இது பொதுமக்களின் பயன்பட்டுக்காக கட்டப்பட்டவை கிடையாது. இது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மணல் திட்டுகள் மட்டுமே என கூறி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தரப்பில் இடைக்கால மனு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை ராமர் பாலம் தேசிய புராதான சின்னமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் இந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகள் பாதுக்கப்படும். ஆனால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்படி பாதுகாக்க இயலும். எனவே, இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவகாசம்

இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 2ஆவது வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சேது சமுத்திர திட்டம்

முன்னதாக, பேரறிஞர் அண்ணாவின் கணவுத் திட்டமும், கலைஞர் கருணாநிதி நிறைவேற்ற பாடுபட்ட திட்டமுமான, சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தனித் தீர்மானத்தை கொண்டு வந்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.