May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது

1 min read

Sethu Samudra Project – Resolution passed unanimously in Assembly

12.1.2023
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது

சேதுசமுத்திர திட்டம்

“தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என தமிழகம் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் தமிழகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
அவர் பேசும் போது கூறியதாவது:-
150 ஆண்டுகால கனவு திட்டம் சேது சமுத்திர திட்டம் அத்திட்டத்தின் தீர்மானத்தை பேரவையில் முன்மொழிவதை வரலாற்று கடமையாக கருதுகிறேன். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது. 1860ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டைலர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் குழு, 1963-இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திரசிங் ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக்குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம் ஆகும். இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் “Feasibility Study”-க்கு அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன்சிங்கால் 2004ம் ஆண்டு ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி முன்னிலை வகிக்க இத்திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் 2.7.2005 அன்று துவக்கி வைத்தார்கள். திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களை செழிக்க வைக்கும் இத்திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ அதையே நிராகரிக்கும் வகையில் தற்போது “ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்” என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இப்படி மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத்திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்

சிறுகப்பல்கள்

தொடர்ந்து எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசும் போது கூறியதாவது;-
150 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் சிறு கப்பல்கள் வந்து போவதற்கும், இலங்கையை தவிர்த்து கப்பல் செல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உருவாகி இருக்கும்.தற்போது இத்திட்டத்தை முதலமைச்சர் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர்கூறினார்.
சிபிஎம் எம்.எல்.ஏ. நாகை மாலி பேசும் போது கட்டுக் கதைகளும், கற்பனைகளும், நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பல எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம் என கூறினார்.

நீரோட்டம்

பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசும் போது ராமேஸ்வரம் என்பது நீரோட்டம் அதிகம் உள்ள பகுதி. அதனால் அங்கு சில பிரச்னை உள்ளது. ராமர் பாலத்தை எதுவும் செய்யாமல், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் வரவேற்வோம் என்றும் கூறினார்.

எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா பேசும் போது, “தமிழருக்கு மிகப்பெரிய அளவில் உதவக்கூடிய சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது; அதை செயல்படுத்த தமிழகம் அரசு மேற்கொள்ளும் முயற்சியை மனதார வரவேற்கின்றேன்” என கூறினார்.

ஜி.கே.மணி எம்.எல்.ஏ பேசும் போது, “ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் இது ஒரு வளர்ச்சி திட்டம். இது இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டு திட்டம் என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்; இதற்கு முதலமைச்சர் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு பாமக எப்போதும் ஆதரவு தெரிவிக்கும்” என கூறினார். ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது “முதலமைச்சரின் தீர்மானத்தின் அடிப்படையில் சாதகங்களை பேசி வலு சேர்க்க வேண்டும், ஆதரவு கேட்க வேண்டும், கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்கள் அரசியல் கட்சியினர் தெரிவித்திருப்பார்கள் அதை பேசுவதற்கு இது நேரமல்ல” என கூறினார்.
இறுதியில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. சேது சமுத்திர திட்டம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.