May 27, 2024

Seithi Saral

Tamil News Channel

கவர்னர் விவகாரம்: முதல் அமைச்சரின் கடிதம் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு

1 min read

Governor’s Matter: Handover of Prime Minister’s letter to President

12.1.2023
கவர்னர் விவகாரம் தொடர்பாக தமிழகம் அரசின் பிரதிநிதிகள் முதல் அமைச்சரின் கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்தனர்

கவர்னர்

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். இதையடுத்து அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சட்டசபை உரையில் சில பகுதிகளை தவிர்த்தது ஏன் என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் 6 அம்சங்களை சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக, கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழக அரசு சார்பில் 6 பக்க தகவல் வெளியானது.

கடிதம்

இதற்கிடையே சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்து அவர் மீது ஜனாதிபதியிடம் புகார் அளிக்க தி.மு.க. எம்.பி.க்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக பிரதிநிதிகள், இன்று நேரில் சந்தித்தனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்வு தொடர்பாக ஜனாதிபதியிடம் திமுக பிரதிநிதிகள் குழு விளக்கம் அளித்தது.
இந்த சந்திப்பின் போது, திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில், தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் இடம்பெற்றிருந்தனர். இந்த மனுவில், அரசியல் சாசனத்தை மீறி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக புகார் அளிக்கப்பட்டது.
மேலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரைகள் வழங்க வலியுறுத்தப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. உரையில் உள்ள சில பத்திகளை கவர்னர் ரவி தவிர்த்து பேசியது பற்றி ஜனாதிபதியிடம் முறையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேட்டி

கவர்னர் ஆர்.என்.ரவி. விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்த பிறகு திமுக எம்.பி டி.ஆர்.பாலு. செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஒப்புதல் அளித்து உரையை கவர்னர் மாற்றி பேசியது பேரவை விதிகளுக்கு முரணானது. ஒப்புதல் அளித்த அந்த உரையில் பலவற்றை தவிர்த்தும், சேர்க்கவும் செய்துள்ளார் கவர்னர் ஆர்.என்.ரவி. கவர்னர் விவகாரம் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம். திமுக குழு எடுத்துரைத்த விஷயங்களை கவனமாக கேட்டறிந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. கவர்னருக்கு எதிரான மனுவை சீலிட்ட கவரில் ஜனாதிபதியிடம் வழங்கி உள்ளோம். ஜனாதிபதியை சந்தித்ததால் மத்திய மந்திரி அமிஷாவை சந்திப்பதற்கான அவசியம் இல்லை. தமிழக கவர்னர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். ஜனாதிபதியிடம் வழங்கப்பட்ட கவர்னருக்கு எதிரான மனுவில் உள்ள விஷயங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் தெரியும்.

தமிழகத்தில் சனாதன கொள்கையை திணிக்க கவர்னர் ஆர்.என்.ரவி முயற்சிக்கிறார். தமிழக கவர்னர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்க்ள் குரல் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.