May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

ராகுல் பாதயாத்திரை நிறைவு விழாவுக்கு 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு

1 min read

Congress invites 21 parties for the closing ceremony of Rahul Padayatra

29.1.2023
ராகுல் பாதயாத்திரை நிறைவு விழாவுக்கு 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ராகுல் யாத்திரை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7-ந் தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ந்தேதி காஷ்மீர் சென்று அடைந்தார். அவரது நடைபயணத்தின் போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர்.
சோனியாகாந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின்போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடை பயணத்தை தற்காலிகமாக நிறுத்தினார். பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டை காஷ்மீர் போலீசார் மறுத்து இருந்தனர். பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை என்று தெரிவித்தது. தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ராகுல்காந்தியின் பாத யாத்திரை புல்வாமா மாவட்டம் அவந்தி போராவில் நேற்று மீண்டும் தொடங்கியது.
ராகுல்காந்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, அவரது மகள் இல்டிஜா முப்தி மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராமானோர் பங்கேற்றனர். ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா லேத்போரா பகுதியில் நடைபயணத்தில் இணைந்தார்.
நேற்று ராகுல்காந்தியை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நடைப்பயணம் தொடங்கிய இடத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். புல்வாமாவில் கடந்த 2019-ல் தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 40 பேர் பலியான இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்ரீநகரை நோக்கி அவர் நடைபயணத்தை தொடர்ந்தார். ராகுல்காந்தியின் பாத யாத்திரை நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அதன் பின்னர் எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த கட்சி பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 12 எதிர்க்கட்சிகள் ராகுல்காந்தியின் நடை பயண நிறைவு விழாவில் பங்கேற்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. சில எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக புறக்கணிக்கின்றன.
ராகுல்காந்தியின் பாத யாத்திரை நிறைவு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும், பாத யாத்திரையிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவு விழாவின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல்காந்தி 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் 145 நாட்கள் மொத்தம் 3,970 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.