May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு

1 min read

Collector PN Sreedhar reviewed development work for farmers in Kanyakumari district

23.2.2023-
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை, வேளாண்மை பொறியியல்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில், தோவாளை மற்றும் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

விரிவாக்க மைய கட்டிடம்

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தோவாளை வட்டாரத்தில் பீமநகரி ஊராட்சியில் கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை
வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை பார்வையிட்டதோடு, மேலும் நடைபெறவிருக்கும்
முள்வேலி அமைத்தல், ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விதைப்பண்ணை

இவ்விரிவாக்க மையம் மூலம் தோவாளை ஊராட்சி
ஒன்றியத்திற்குட்பட்ட சகாயநகர், திருப்பதிசாரம், பீமநகரி ஊராட்சி பகுதிகளை சார்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
மேலும், திருப்பதிசாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் 31.6 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விதைப்பண்ணை மற்றும் விதை
சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு, விதை சுத்திகரிப்பு செய்யும் பணியின் பல்வேறு நிலைகளையும் சான்றட்டை பொருத்தப்பட்ட விதை மூடைகளையும் ஆய்வு மேற்கொண்டதோடு, இவ்விதைகள் மாவட்டத்தில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும்
அனுப்பப்பட்டு விநியோகம் செய்யப்படுவது குறித்து கேட்டறியப்பட்டது.

திருப்பதிசாரம் கிராமம் லலிதா பண்ணையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டததின் மூலம் இயந்திரமான மரச்செக்கு கருவியினை ரூ.94,683 மானியத்தில் நிறுவப்பட்டதையும், இந்த இயந்திரத்தின் மூலம் தேங்காய், நிலக்கடலை மற்றும் எள் ஆகியவற்றிலிருந்து எண்ணெய்
உற்பத்தி செய்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, நாவல்காடு கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பழனி மூலம் அமைக்கப்பட்ட துளசி அங்கக வேளாண் பொருட்கள் உற்பத்திக்குழு தயாரிப்பு மையத்தை பார்வையிட்டப்பட்டு, அதற்காக ஒரு இலட்சம் ரூபாய் மானியத்திற்கான செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளதோடு, அங்கு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா, மீனமிலம், வேப்பங்கொட்டை கரைசல், மண்புழு உரம், தேமோகரைசல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தோட்டக்கலைத்துறையின் சார்பில், வேம்பனூர் கிராமத்தில் சிறுமணி தோட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் 2022-23-ன்கீழ் நல்லமிளகு சாகுபடிக்கு ரூ.20000 மானியம் வழங்கப்பட்டது குறித்தும், அவரது தோட்டத்தில் தோட்டக்கலைத்துறைமூலம் வழங்கப்பட்ட கோகோ பயிர் மற்றும் சொட்டுநீர் பாசனத்தையும் பார்வையிட்டு ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
மானியம்

மேலும், தோவாளை வட்டாரத்திற்குட்பட்ட பகுதியில் மாநில வேளாண்மை விரிவாக்கத் திட்டத்தின்கீழ் நாவல்காடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை மற்றும் சந்திரன்
அவர்களுக்கு ரூ.813 மானியத்தில் தார்பாலினும், ஐயப்பன் என்ற விவசாயிக்கு 10 கிலோ சிங்க் சல்பேட் ரூ.250 மானியத்திலும் வழங்கப்பட்டதோடு, நாவல்காடு
கிராமத்தில் பரமசிவன் அவர்களுக்கு இயந்திரங்கள் வாடகை சேவை மையம் அமைப்பதற்குரூ.25 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்பட்டதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இத்திட்டத்தின்கீழ் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம், டிராக்டர்
மற்றும் ரோட்டோவேட்டர் வழங்கப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த இயந்திரங்களை அப்பகுதி விவசாயிகள் வாடகைக்கு வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் பரமசிவம் வயலில் ரூ.2,65,885 மதிப்பில் 70 சதவீத மானியத்தில் நிறுவப்பட்ட சோலார் பம்புசெட் மூலம்
அப்பகுதியில் நெல் மற்றும் உளுந்து சாகுபடி செய்து வருகிறார்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர்
ஹனிஜாய்சுஜாதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை)
எஸ்.கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் யோ.ஷீலா ஜாண், வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜோ.சில்வெஸ்டர் சொர்ணலதா, விதைச்சான்று உதவி இயக்குநர்ஷீபா, வேளாண்மை உதவி இயக்குநர்கள் ஜோஸ், சுரேஷ் மற்றும் பண்ணை மேலாளர்(பொ) சூரியபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.