May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

1 min read

Student committed suicide by jumping from 3rd floor of college

27.2.2023
கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்டார். கல்லூரி முதல்வர் தேன்மொழி, விடுதி காப்பாளர் கவுசல்யா மற்றும் மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடமும், பெற்றோரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழையபட்டியை சேர்ந்த கன்னியப்பன் – பழனியம்மாள் தம்பதியின் மகள் கார்த்திகா ஜோதி (வயது 19). இவர், ஒட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவி கார்த்திகா ஜோதி, கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி காலை கார்த்திகா ஜோதி, தான் தங்கியிருந்த விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி மற்றும் கல்லூரி ஊழியர்கள், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
அத்துடன் கல்லூரி முதல்வர் தேன்மொழி, விடுதி காப்பாளர் கவுசல்யா மற்றும் மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடமும், பெற்றோரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சாவு

இதற்கிடையே சிகிச்சை பலன் இன்றி மாணவி கார்த்திகா ஜோதி இன்று உயிரிழந்தார். இதையடுத்து அந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒட்டன்சத்திரத்தில், தாராபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யுங்கள் என்றும், கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆவேசமாக கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறவினர்களிடம் உறுதியளித்தனர்.
அதைத்தொடர்ந்து கார்த்திகா ஜோதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள். இந்த சாலை மறியலால் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

இதன்பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள், அங்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட கார்த்திகா ஜோதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது திடீரென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் செய்தனர். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பினார்கள் இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாதர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.இந்த விவகாரத்தில் விரைவில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.