மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்
1 min read
Tomorrow is the last day to link Aadhaar number with electricity connection number
27.2.2023
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 28) நிறைவடைகிறது.
ஆதார்
சென்னை, தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மானியம் பெறக்கூடிய மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அறிவிப்பு மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31-ஆம் தேதி எனக் கூறப்பட்ட நிலையில், ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
நாளையுடன்
அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28-ந் தேதியுடன் (நாளையுடன்) நிறைவடைகிறது. இதற்குமேல் அவகாசம் வழங்கப்படாது என்று மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhmtl என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.