May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

கார்கேவுக்கு அவமரியாதை; சோனியா காந்தி குடும்பம் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

1 min read

Disrespect to Karke; Prime Minister Modi attacks Sonia Gandhi’s family

28.2.2023
சத்தீஸ்கரில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்துவிட்டனர் என்று பெலகாவியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, சோனியா காந்தி குடும்பத்தை மறைமுகமாக தாக்கி பேசினார்.

வளர்ச்சி திட்டம்

இந்தியாவின் மறுமலர்ச்சி பெலகாவியில் ரூ.2,700 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டங்களை தொடக்க விழா, கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 13-வது தவணையாக 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதி உதவி நேரடியாக வங்கி கணக்கிற்கு செலுத்தும் விழா பெலகாவியில் நேற்று நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும், விவசாயிகளுக்கு நிதி உதவியை வங்கி கணக்கில் செலுத்தியும் பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

பெலகாவி மக்களின் ஒப்பற்ற அன்பும், ஆசீர்வாதங்களும், மக்கள் நலனுக்காக உழைக்கவும், வலிமையின் ஆதாரமாக விளங்கவும் என்னை ஊக்குவிக்கிறது. காலனித்துவ ஆட்சிக்கு எதிராக கித்தூர் ராணி சென்னம்மா, விடுதலை போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணா ஆகியோர் போராடிய மண் இது. இன்றைய போராட்டத்திலும், இந்தியாவின் மறுமலர்ச்சியிலும் இது ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. உங்களுக்கு சொந்தமானது பெலகாவி மூலம், நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் இன்று (நேற்று) ஒரு சிறப்புப் பரிசு கிடைத்துள்ளது. அதாவது கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ரூ.16 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஒரு பொத்தானை ‘கிளிக்’ செய்வதன் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.16,000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர் சம்பந்தம் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ரூபாய் ஒதுக்கினால் ஏழைகளுக்கு 15 பைசா மட்டுமே சென்றடைவதாக அப்போதைய பிரதமர் கூறினார். ஆனால் இது மோடி அரசு. தற்போது ஒவ்வொரு பைசாவும் உங்களுக்கு சொந்தமானது, அது உங்களுக்கானது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக விவசாயிகளுக்கு இந்த சிறப்பு பரிசு கிடைத்துள்ளது. நலிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் சிறு விவசாயிகளுக்கும் தற்போதைய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. கிசான் கடன் அட்டை பிரதமர் கிசான் சம்மன் நிதி உதவி திட்டம் தொடங்கியது முதல் இதுவரை சிறு விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2½ லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.50 ஆயிரம் கோடி பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம், விவசாயிகளின் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு ரூ.25,000 கோடியாக இருந்த நாட்டின் விவசாய பட்ஜெட், தற்போது ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
நாட்டின் விவசாயிகளை ஆதரிப்பதில் பா.ஜனதா அரசின் உறுதிமொழிக்கு இது ஒரு சான்றாகும். ஜன்தன் வங்கி கணக்குகள், மொபைல் இணைப்புகள் மற்றும் ஆதார் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வங்கிகளின் ஆதரவை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) வழங்கியுள்ளது. சிறுதானியங்கள் சேமிப்பு மற்றும் விவசாயத்தில் செலவை குறைப்பது, சிறு விவசாயிகளை ஒழுங்கமைப்பது இன்றைய தேவை. அதனால்தான் இந்த பட்ஜெட் சேமிப்பு வசதிகளை வலியுறுத்துகிறது. கூட்டுறவு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதேபோல், இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தினால் விவசாயிக்கு செலவு குறையும். எதிர்கால சவால்களை பகுப்பாய்வு செய்வதிலும், அதே வேளையில் இந்தியாவின் விவசாய துறையை வலுப்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்துகிறது.
சிறுதானியங்கள் அல்லது தினைகளின் பாரம்பரிய வலிமையை மீட்டெடுக்க வேண்டும். மேலும் இந்த சிறுதானியங்கள் எந்த காலநிலையையும் தாங்கும் திறன் கொண்டவை. சிறுதானியங்களின் முக்கிய மையமாக கர்நாடகம் திகழ்கிறது. அதே போல் கரும்பு உற்பத்தியிலும் முக்கிய மாநிலமாக கர்நாடகம் இருக்கிறது. கரும்பு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க எத்தனால் உற்பத்தி உதவுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் பெட்ரோலில் எத்தனால் சேர்ப்பது 1½ சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த எத்தனால் சேர்ப்பை 20 சதவீதமாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில், கர்நாடகத்திற்கு ரெயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு ரூ.4 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.7 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்று சுமார் ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான ரெயில்வே திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பெலகாவியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நவீன ரெயில் நிலையம், பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.
இது ரெயில்வே மீதான நம்பிக்கையை அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் பல ரெயில் நிலையங்கள் இத்தகைய நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன. இரட்டை என்ஜின் அரசு விரைவான வளர்ச்சிக்கு உத்தரவாதம். முந்தைய அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் ஒவ்வொரு சிறிய பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.

அவமதிப்பு

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை அக்கட்சி மேலிடம் அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது. காங்கிரஸ் தலைவர்கள் நிஜலிங்கப்பா, வீரேந்திர பட்டீல் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் குடும்பத்தின் முன்பு எப்படி அவமதிக்கப்பட்டார்கள் என்பதற்கு வரலாறு ஆதாரமாக உள்ளது.

அதே போல் தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் காங்கிரஸ் குடும்பம் அவமதித்துள்ளது. மல்லிகார்ஜுன கார்கே இந்த மண்ணின் மகன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவருக்கு 50 ஆண்டுகள் நாடாளுமன்ற, சட்டமன்ற அனுபவம் உள்ளது. அவர் தன்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவையாற்றியுள்ளார். சத்தீஸ்கரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சமீபத்தில் சத்தீஸ்கரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், கொளுத்தும் வெயிலில் மல்லிகார்ஜுன கார்கேவை குடையின் நிழலில் நிற்க கூட தகுதியானவராக கருதாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது. ஆனால் அவருக்கு அருகில் நின்றவருக்கு குடையின் நிழல் கிடைத்தது. அவர் காங்கிரஸ் தலைவர், ஆனால் அவர் நடத்தப்படும் விதத்தில் யார் ‘ரிமோட் கண்ட்ரோல்’ வைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மல்லிகார்ஜுன கார்கே பெயரளவில் மட்டுமே காங்கிரசின் தலைவராக உள்ளார்.

குடும்ப அரசியல்

நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள் குடும்ப அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த குடும்ப அரசியலில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டியது அவசியம். காங்கிரஸ் போன்ற கட்சிகளிடம் கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உண்மையான நோக்கத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படும்போது உண்மையான வளர்ச்சி ஏற்படும். கர்நாடகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த, நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். சவக்குழி தோண்டுகிறார்கள் இந்த மோடி உயிருடன் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என்று கருதி காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் அவர்கள் மோடி சாக வேண்டும், மோடி சாக வேண்டும் என்று முழக்கமிடுகிறார்கள். சிலர் எனக்கு சவக்குழி தோண்டுவதில் பரபரப்பாக உள்ளனர். மோடி உங்களுக்கு சவக்குழி தோண்டப்படும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நாட்டு மக்களோ, உங்களிடம் தாமரை மலரும் என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா மற்றும் கா்நாடக மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.