செனனையில் போலி டாக்டர் கைது- சரியா/ முத்துமணி
1 min readPoli doctor – Is it correct/ Muthumani
12/11/2021
‘சென்னையில் போலி டாக்டர் பெருமாள் சாமி கைது. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்துவந்தார் என்று கூறப்படுகிறது.’
-இது போன்ற செய்திகள் அடிக்கடி செய்தித்தாள்களில் வருவதுண்டு. அந்த நேரங்களில், இவனைப் போன்றோர்க்கு நீதிமன்றத்தில் என்ன வகையான தண்டனை கிடைக்கும்? மருத்துவம் படிக்காமலே மருத்துவம் செய்த, இவன் எத்தனை மனிதரைக் கொன்றிருப்பான்? இவ்வளவு நாள், இவன் மருத்துவர் இல்லை என்ற செய்தி காவல் துறைக்குத் தெரியாதா? இப்போது மட்டும் எப்படித் தெரிய வந்தது? இது போன்ற கேள்விகள் மட்டுமே மனதில் தோன்றும்.
நூற்றுக்கணக்கான பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த போலிச் சாமியார் கைது. இது போன்ற செய்திகளையும் படிக்கிறபோது இவனை எல்லாம் ஏன் பெண்கள் நம்புகின்றனர்? இவன் சரியில்லாதவன். சாமியாரில்லை என்பது முதலிலேயே தெரியாதா? இத்தனை பேர் ஏமாந்தது எப்படி? என்கிற கேள்விகள் மனதில் எழும்.
போலி மருத்துவர், போலிச் சாமியார் போன்று போலி வழக்கறிஞர், போலி ஆசிரியர் போலிப் பொறியாளர் எவரேனும் உண்டா? என்பதும் சிந்தனையில் தோன்றும்.
செய்தித் தாள்களில் பின்வருமாறு சில செய்திகளையும் பார்த்திருக்கிறேன்.
வங்கி அதிகாரி போல நடித்துப் பணத்தை ஏமாற்றிய நபர் கைது.
வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து பல லட்ச ரூபாய் ஏமாற்றிய பலே கில்லாடி கைது.
அப்படியானால் இந்தச் செய்திகளிலும் போலி வங்கி அதிகாரி கைது. போலி வருமான வரித் துறை அதிகாரி கைது என்ற சொற்களே இடம்பெற்றிருக்கலாம் அல்லவா?. காவல்துறை அதிகாரியாக நடித்துப் பலரையும் ஏமாற்றியவன் இவன்தான் என்று படத்தோடு செய்தித்தாள்களில் இடம்பெறும் செய்தியில், இவன்தான் பலரையும் ஏமாற்றிய போலி காவல்துறை அதிகாரி என்று ஏன் எழுதவில்லை?
தமிழ் இலக்கணம் என்ன சொல்லுகிறது.
நிலம்-நிலன்,
அறம்-அறன்.
பந்தல்-பந்தர்,
மஞ்சு-மைஞ்சு
மேற்கண்ட சொற்களில் எழுத்துகள் சில மாறியிருந்தாலும், பொருள் குறித்து அதில் எந்த மாற்றமும் இல்லை. நிலம் என்பதும் நிலன் என்பதும் பூமியைக் குறிக்கும் என்பதால், எழுத்து மாறியிருந்தாலும் பொருள் மாறாத காரணத்தால் நிலன் என்பதைப் போலி என்று கொள்கிறோம்..
முன்னும் பின்னுமாக எழுத்துகள் மாறி இருப்பதைக் கூட இலக்கணம் ஏற்றுக் கொள்கிறது முன்பின்னாக தொக்கப் போலி என்று.
தசை என்பதை சதை என்று கூறுவது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இல்முன் என்பதை வாயில் என்று எழுதுவதும் கூறுவதும் போலி இலக்கணப்போலி…. ஐந்து என்னும் சொல்லில் மூன்று எழுத்துகளும் மாறி அஞ்சு என்று வழங்கும்போது பொருள் மாறுபாடு இல்லாத காரணத்தால் முற்றுப்போலி என்றதனை ஏற்றுக் கொள்கிறோம்…
இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால் போலி என்ற சொல் ஏமாற்று என்னும் பொருள் தராது. வீட்டைத் திறப்பதற்கு ஒரு சாவிதான் வேண்டும் ஆனால் வாங்குகிறபோது இன்னும் ஒரு சாவியைத் சேர்த்துதான் தருவர். ஒன்று சாவி. இன்னொன்று மாற்றுச் சாவி ஆங்கிலத்தில் duplicate key. இரண்டுமே கதவைத் திறக்கும். ஆகையால் டுப்ளிகேட் என்பதை நாம் பொய்யான சாவி என்று சொல்வதில்லை…. ஆனால் நமக்குத் தெரியாமல் இன்னொருவன் நம் வீட்டை வேறு ஒரு சாவியால் திறந்தான் என்றால், அதன் பெயர் மாற்றுச் சாவி இல்லை.அது கள்ளச்சாவி…
எப்படி இருந்தாலும் போலி என்று சொல்வதில் பொருத்தமில்லை…
மருத்துவம் கல்லாத ஒருவனை எப்படி போலி மருத்துவர் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?. கள்ளச்சாவி போல் கள்ள மருத்துவர்…. என்று கூற முடியாது. ஏமாற்றுக்காரன், மருத்துவராக நடித்தவன்… ஏனெனில் மருத்துவம் செய்வதற்குரிய அடிப்படைக் கல்வி அவனிடம் இல்லை… அடிப்படைத் தகுதி அவனுக்கில்லை… எதையும் துறவாமல் சாமியார் என்று தன்னைக் கூறுபவன் போலிச் சாமியார் இல்லை. ஏமாற்றுக்காரன். சாமியாராக நடித்து உரை ஏமாற்றியவன்..
இவர்களை எல்லாம் போலி என்று நாம் ஏற்றுக்கொண்டால் நாமே அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பது போல் ஆகிவிடுகிறது அல்லவா…? டாக்டரே இல்லாத ஒருவனை போலி டாக்டர் என்று கூறுவதன் மூலம் நாமே அவரை டாக்டர் என்று குறிப்பிட்டு விடுகிறோம்.. அல்லது ஏற்றுக் கொள்கிறோம்… சாமியாரே இல்லாத ஒருவனை போலிச் சாமியார் என்ற சொல்லால் குறிப்பிடும் போது நாமே அவனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது போல் ஆகிவிடுகிறது அல்லவா….???
தமிழ் முத்துமணி