June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் 27 பேரின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடுவேன்: அண்ணாமலை பேச்சு

1 min read

DMK I will publish corruption list of 27 key administrators on April 14: Annamalai speech

25.3.2023
தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த லேப்டாப்பை நிறுத்திவிட்டு கடலில் பேனா சிலை வைக்க முற்படுகின்றனர்.

தென்காசியில் அண்ணாமலை

தென்காசி மாவட்ட பா.ஜனதா சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச்செயலாளர் பொன் பால கணபதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள் செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் சுமார் 7 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு அண்ணாமலை வருகை தந்தார். தென்காசி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மலர் கிரீட மாலை அணிவித்து அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்க முற்பட்டனர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜாவுக்கு அதனை அளித்து மரியாதை செய்தார்.
பின்னர் அண்ணாமலை பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

காசி தமிழ் சங்கமம்

வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தென்காசி பொதுக்கூட்டம் ஒரு முன்னோட்டமாக தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும் பொழுது தென்காசியை பற்றி பேசினார். தென்காசியில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு டெல்லிக்கு செல்வார்.

எய்ம்ஸ்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர்கள் சேர்ந்து பயின்று வருவதை தெரியாமல் தி.மு.க.வினர் அரசியல் பேசி வருகின்றனர் . தற்பொழுது 150 மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். ரூ.1,900 கோடி பட்ஜெட்டில் ஜப்பான் அரசு உதவியுடன் கட்டப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தற்பொழுது ஆளும் தி.மு.க. அரசால் சாராயம் மூலம் ரூ.46 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளதாக தெரிவித்தனர். அதில் 2,000 கோடியை மத்திய அரசிற்கு கடனாக கொடுத்து மிகப் பிரம்மாண்டமாய் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிவிடலாம். ஆனால் ஆளும் தி.மு.க. அதை செய்ய மறுக்கிறது.

வரும் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் தி.மு.க.வை சேர்ந்த 27 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தற்போதைய அமைச்சர்கள் என அவர்களின் சொத்து மதிப்பு மட்டும் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ஊழல் செய்து வைத்துள்ளனர் என்பதை வெளியிட உள்ளேன். அன்றுதான் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய தமிழ் புத்தாண்டு நாளாக கொண்டாடப்பட இருக்கின்றனர். தமிழக பட்ஜெட் அறிக்கையின் பொழுது பி. டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் எந்த மொழியில் பேசினார் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள்தான் தமிழை வளர்கிறோம் என்று பொதுமக்களிடையே பேசிக்கொண்டு திரிகின்றனர்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு தற்பொழுது நாங்கள் அறிவிக்கும் பெண்களுக்கு மட்டுமே ஆயிரம் வழங்கப்படும் என்று பேசுவது பெண்களை அவமதிக்கும் செயல்.

அழகிரி போராட்டம்

ராகுல் காந்தி கடந்த 2019-ல் கர்நாடக தேர்தலின் பொழுது மோடி திருடன் என்று கூறினார் ஆனால் மோடி என்பது ஒரு சமூகத்தின் பெயர் என்பது கூட தெரியாமல் தவறாக பேசியதன் விளைவாக தற்பொழுது 2 ஆண்டு தண்டனை பெற்றுள்ளார். அது தெரியாமல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி ரெயிலே வராத தண்டவாளத்தில் நின்று போராட்டம் நடத்தியுள்ளார். தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த லேப்டாப்பை நிறுத்திவிட்டு கடலில் பேனா சிலை வைக்க முற்படுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, அன்பாலயம் ஸ்ரீ வரகவி சிவச்சந்திரன், தென்காசி பா.ஜ.க. நிர்வாகி ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.