June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார்

1 min read

Rs 1.31 Lakh Crore: Annamalai released DMK’s property list

14.4.2023
திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

குற்றச்சாட்டு

திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது. அண்ணாமலை கையில் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும், அது பல லட்சம் மதிப்புடையது என்றும் திமுகவினர் விமர்சித்தனர். ஆனால், அது வெளிநாட்டு வாட்ச் அல்ல, ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட வாட்ச் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும் என திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதற்கு, வாட்ச் வாங்கியதற்கான ரசீது தன்னிடம் இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிடுவதாகவும் அண்ணாமலை கூறினார். அதோடு, ஏப்ரல் 14-ம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
திமுகவின் இந்த ஆட்சி மட்டுமல்லாமல், கடந்த திமுக ஆட்சியிலும் நடைபெற்ற ஊழல்களையும் வெளியிட இருப்பதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத் தலைவர் ஆன பிறகு மாதம் ரூ.8 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. எனது வீட்டு வாடகை, உதவியாளர்களுக்கான ஊதியத்தை நண்பர்கள் தான் தருகிறார்கள். காருக்கு கட்சி தான் பெட்ரோல் போடுகிறது.
காவல் பணியில் இருந்த போது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147-வது வாட்சை நான் வாங்கினேன். 3 லட்சத்திற்கு இந்த வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரஃபேல் வாட்சை வாங்கினேன். 2021ம் ஆண்டு இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார்.
இவ்வாறு அவர்தெரிவித்தார்.
மேலும் ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார்.

ரூ.1.31 லட்சம் கோடி

இதனைத் தொடர்ந்து, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார்.
திமுக ஃபைல்ஸ் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, எம்பி கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி, துர்கா ஸ்டாலின், அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து திமுக ஃபைல்ஸ் காலை 10.15 மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புரோமோ தமிழக அரசியல் சூழலில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். தனது ரபேல் வாட்ச் விவரத்தை அவர் வெளியிட்டார். மேலும் 15 நிமிடங்கள் கொண்ட வீடியோவை அவர் வெளியிட்டார். இதில் திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள், திமுக கட்சியில் உள்ளவர்கள் நடத்தும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் விவரங்கள் இடம் பெற்றது. அவர் வெளியிட்ட வீடியோவில், அமைச்சர் ஏ.வ வேலு, அன்பில் மகேஷ், கே.என். நேரு, டி.ஆர் பாலு, துரை முருகன், கதிர் ஆனந்த், காலாநிதி வீராசாமி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சொத்து பட்டியல் இடம் பெற்றுள்ளது.
இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *