May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

12 மணி நேர வேலை தொடர்பான தொழிலாளர் சட்ட முன்வடிவு வாபஸ்: மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min read

Withdrawal of draft labor law on 12-hour work: M. K. Stalin’s speech

1.5.2023
12 மணி நேர வேலை தொடர்பான தொழிலாளர் சட்ட முன்வடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உழைப்பாளர் தினம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (01.05.2023) உழைப்பாளர் தினமான மே நாளையொட்டி, சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். அதுமட்டுமல்ல, அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும். அதிலும் குறிப்பாக, தென் மற்றும் வட மாவட்டங்களில் அந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற அந்த நோக்கில்தான் தமிழ்நாடு அரசால் ஒரு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது.
இது அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்ட திருத்தம் அல்ல. மிகமிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அதுவும் நிபந்தனைகளுடன் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணிநேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்பதே அந்த சட்டத்தினுடைய திருத்தம்.

சந்தேகங்கள்

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் அதில் இருந்தது. ஆனாலும் தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களுக்கு அதில் சில சந்தேகங்கள் இருந்தன. அதனால் பல்வேறு கோணங்களில் அது விமர்சனம் செய்யப்பட்டது.
திமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தமாகவே இருந்தாலும் திமுகவினுடைய தொழிற்சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் அதில் வேடிக்கை. அதற்காக நான் அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

திரும்பப்பெற்றது

திமுக எத்தகைய ஜனநாயக மாண்பு கொண்ட அமைப்பு என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, இதன் மூலம் அது மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய விமர்சனம் வந்ததும், உடனடியாக அனைத்து தொழிற்சங்கத் தோழர்களையும் கோட்டைக்கு அழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப் பிறகு தொழிற்சங்கத்தின் கருத்துக்களைக் கேட்டு, உடனடியாக எந்தவித தயக்கம் இன்றி, துணிச்சலோடு அதைத் திரும்பப் பெற்றிருக்கக்கூடிய அரசுதான் நம்முடைய அரசு.
மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துதும் அதனை திரும்பப் பெறுவதற்காக ஓராண்டிற்கு மேலாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக உழவர்கள் தலைநகர் டெல்லியில் போராடினார்கள். வெயிலில், மழையில், பனி, இதுபோன்ற கொடுமையில் அவர்கள் போராடி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் போராடிய காரணம் உங்களுக்குத் தெரியும். அதனால் பலபேர் உயிரையும் இழந்திருக்கிறார்கள். இந்த மாபெரும் உழவர்களின் போராட்டத்தைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களை வதைபடக்கூடிய நிலையில் விட்டுவிட்டார்கள்.
அதேபோல, எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து ஒரே இரவில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து, அதில் மகிழ்ச்சியடைந்தவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும்.
அவர்களைப் போராடவிட்டு ரசித்தவர்கள், தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், இவர்களுக்கு ஊதுகுழலாக இருக்கக்கூடிய சில ஊடகங்களும் இதனை நமது அரசுக்கு எதிராக மாற்றி விடலாம் என்று திட்டமிட்டு பிரச்சாரத்தைப் பரப்பினார்கள். ஆனால், அவர்களுடைய தீய எண்ணங்களையெல்லாம் தொழிலாளத் தோழர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்.
தொழிற்சங்கத்தினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்ட இரண்டே நாளில் அந்த சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற்ற தொழிலாளர் தோழன்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு. விட்டுக் கொடுப்பதை நான் என்றைக்கும் அவமானமாகக் கருதியது இல்லை. அதை பெருமையாக கருதிக் கொண்டிருக்கக்கூடியவன். ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது துணிச்சல் என்றால் – அதனை உடனடியாகத் திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான், அதை மறந்துவிடக்கூடாது. இப்படித்தான் தலைவர் கலைஞர் எங்களுக்கு பயிற்சி தந்திருக்கிறார்கள். எனவே, அதனால்தான் அதனை நிறுத்தி வைத்திருக்கிறோம். பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்திக்குறிப்பின் மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும்.
இவையெல்லாம் தெரிந்தும் சில ஊடகங்கள் அதைப் பாராட்ட மனமில்லாமல் திமுகவிற்கு எதிரான அஜெண்டாவை நிறைவேற்ற, சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்த பின்பும் ஆழ்மனதில் ஊறிய வன்மத்தோடு அவதூறு செய்திகளை தொடர்ந்து அவர்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.எங்களைப் பொறுத்தவரையில் எந்தச் சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் நாங்கள் என்றைக்கும், யாரும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். தொழிலும் வளர வேண்டும், தொழிலாளர்களும் வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய கொள்கை.
தொழிற்சங்கங்களை புரட்சியின் பள்ளிக் கூடங்கள் என்பார்கள். அத்தகைய தொழிற்சங்கத் தோழர்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் உங்களில் ஒருவனாக இந்த மே தின நினைவுச் சின்னத்திற்கு நான் வீரவணக்கத்தை செலுத்தியிருக்கிறேன். தொழிலாளர்கள் உரிமைகளைக் காப்பதோடு, தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான அனைத்துச் செயல்களையும் திராவிட மாடல் அரசு நிச்சயம் செய்து தரும் என்ற உறுதியை நான் தருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.