கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் 27 பவுன் தங்க தாலியை கழற்றி கோவிலுக்கு கொடுத்த திருநங்கைகள்
1 min readTransgender women who took off 27 pounds of gold thali at Koowagam Koothandavar temple and gave it to the temple
4.5.2023
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் 27 பவுன் தங்க தாலியை கழற்றி கோவிலுக்கு கொடுத்தினர்.
கூவாகம் திருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி 2-ந் தேதி நடந்தது. அப்போது கோவில் பூசாரி கையினால் மகிழ்ச்சியுடன் தாலி கட்டிக் கொண்ட ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இரவு முழுவதும் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்சியுடன் இருந்தனர். நேற்று காலை தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
தங்க தாலி கட்டிய திருநங்கைகள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மொத்தம் 27 பவுன் தங்க தாலியை காணிக்கையாக செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொண்டனர். இதே போல் வெள்ளியிலான தாலியை அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டனர்.
தாலியை காணிக்கையாக செலுத்துவதால் கூத்தாண்டவர் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என திருநங்கைகள் தெரிவித்தனர்.