ஆய்க்குடி பெரியநாயகம் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா
1 min readKumbabishekam ceremony at Periyanayakam Swamy Temple in Ayikudi
25.5.2023
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பெரியநாயகம் சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி, பெரியநாயகம் கோயில் தெருவில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான பெரியநாயகம் சுவாமி திருக்கோயிலில் புதிய விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளிட்டவைகளுக்கு திருப்பணிகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நேற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை 22ம் தேதி காலை 4.30 மணிக்கு மேல் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், லெஷ்மி ஹோமம் பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் ஆய்க்குடி சிவன் கோவிலிருந்து புனித தீர்த்த ஊர்வலம் நடந்தது. 23ம்தேதி செவ்வாய்கிழமை காலை 8.30 மணி முதல் மஹா கணபதி பூஜை, ருத்ர ஹோமம், வேதபாராயணனம், தேவாரம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. இரவு 10.30 மணிக்கு மேல் பீட பூஜை, பெரியநாயகம் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தது.
மஹா கும்பாபிஷேக நாளான நேற்று புதன்கிழமை காலை 6.10 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டு திருக்கோயிலின் புதிய கோபுரத்தில் அமையப்பெற்ற விமான கலசத்திற்கும் மற்றும் பெரியநாயகம் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் ஜூர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறும் சிறப்புமாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் அருள்மிகு பெரியநாயகம் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 11.30 மணியளவில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து மஹா கும்பாபிஷேகத்தை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.