போலி ஆவணங்கள் மூலம் தேர்வானதாக சொன்ன 2 பேர் மீது கிரிமினல் நடவடிக்கை யுபிஎஸ்சி தகவல்
1 min readUPSC informs criminal action against 2 people who said they got selected through fake documents
26.5.2023
போலி ஆவணங்கள் மூலம் தேர்வானதாக சொன்ன 2 பேர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற யுபிஎஸ்சி கூறியுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா மக்ரானி, பீகாரைச் சேர்ந்த துஷார் ஆகியோர் தேர்வானதாக கூறியிருந்தனர். உண்மையிலேயே தேர்ச்சி பெற்ற இரண்டு நபர்களின் பெயர்களைப்போன்றே அவர்களின் பெயர்களும் இருந்ததால் அந்த பெயர்களை காட்டி அது தாங்கள்தான் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. யுபிஎஸ்சி தேர்வு முறையில் குளறுபடி நடந்திருக்கலாம் என்ற சர்ச்சையும் எழுந்தது.
ஆனால் யுபிஎஸ்சி நிர்வாகம், ஆவணங்களை சரிபார்த்ததில் ஆயிஷா மக்ரானி, துஷார் இருவரும் தேர்வாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வானதாகக் கூறப்படும் இரண்டு நபர்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்வானதாக இருவரும் கூறியது உண்மையல்ல. அவர்கள் தங்களுக்கு சாதகமாக போலியான ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம், ஆயிஷா மக்ரானி மற்றும் துஷார் இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளனர். எனவே, தேர்வு விதிகளின் விதிகளின்படி, அவர்களின் மோசடி செயல்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்குமுறை சட்ட நடவடிக்கை ஆகிய இரண்டையும் மேற்கொள்ள யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது.
யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது. எனவே அத்தகைய தவறுகள் நடக்க சாத்தியமில்லை. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் இதுபோன்ற உரிமைகோரல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன், யுபிஎஸ்சி-யிடமிருந்து உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது