May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

1 min read

Prime Minister Modi will inaugurate the new Parliament building tomorrow

27.5.2023-
ரூ.1200 கோடியில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

பாராளுமன்றக் கட்டிடம்

டெல்லியில் தற்போதைய பாராளுமன்ற வளாகத்தில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் செயல்படுவதற்கு கடுமையான இட பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் அந்த பாராளுமன்றம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அதில் புதிய நவீன வசதிகள் எதையும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது. இதனால் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பிரதமர் மோடி முடிவு செய்தார். அதன்படி தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கின. 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. 4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன.
மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஒரே நேரத்தில் 1,272 எம்.பி.க்கள் அமர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்ள முடியும். புதிய பாராளுமன்ற கட்டிடம் 2 ஆண்டுகள் 5 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுவதற்கு சுமார் 1,200 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் கருதப்படுகிறது. பழைய பாராளுமன்றம் வட்ட வடிவில் அமைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் கட்டிட கலை பாணி அதில் காணப்படுகிறது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நாளை சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவை காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக கூட்டாக அறிவித்துள்ளன. என்றாலும், திட்டமிட்டபடி திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

செங்கோல்

புதிய பாராளுமன்றம் திறக்கப்படும்போது மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட உள்ளது. அந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டதாகும். அந்த செங்கோல் புனித நீரால் சுத்தம் செய்யப்பட்டு ஆங்கிலேயர்களிடம் வழங்கப்பட்டு, பிறகு ஆதீனம் மூலம் நேருவின் கைக்கு வந்தது. அப்போது கோளறு பதிகம் பாடப்பட்டது. இத்தகைய சிறப்புடைய அந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஆட்சி அதிகாரத்தின் மாற்றத்துக்கு அடையாளமாக கருதப்படும் அந்த செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைப்பதுதான் பொறுத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி முடிவு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அந்த செங்கோல் அலகாபாத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் தமிழகத்தை சேர்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனர். நாளை காலை புதிய பாராளுமன்றத்தில் நடக்கும் விழாவில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தின் ராஜ மேளம் முழங்க அவர்கள் செங்கோல் சுமந்து வருவார்கள். அதை புனித நீரால் தூய்மைப்படுத்தி பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பார்கள்.
முன்னதாக நாளை காலை புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு ஹோமம் செய்து வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவை முடிந்ததும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நாளை பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். பா.ஜ.க. வின் தோழமை கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., சிவசேனா கட்சிகள் பங்கேற்கின்றன. எதிர்க்கட்சிகளில் பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலிதளம் உள்பட பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ள வருகின்றன. வரும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும். அந்த கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.