இராமநதி-ஜம்புநதி திட்டத்திற்கு விரைந்து அனுமதிமத்திய அமைச்சருக்கு வைகோ எம்பி கடிதம்
1 min read
Ramnadi-Jambunadi project expedited clearance Vaiko MP letter to Union Minister
28.5.2023
தென்காசி மாவட்டத்தில் இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்கிட வேண்டுமென மத்திய அமைச்சருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
ஜம்பு நதி திட்டம்
இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் ரூ.41.08 மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அரசாணை எண் 292 வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சேலம் டி.எஸ்.நிறுவனத்தோடு ஒப்பந்தப்புள்ளி நிறைவேற்றப்பட்டு, 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணி துவங்கிய நிலையில், வனத்துறை அனுமதி பெறாததால் திட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்காததால் அவர்களும் கால்வாய் வெட்ட அனுமதிக்கவில்லை.
இதனை சரிசெய்து கால்வாய் வெட்ட எந்த முயற்சியும் கடந்த அதிமுக ஆட்சியில் எடுக்கப்படாததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபின் வனத்துறையின் முறையான அனுமதி பெறவும்,
கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடுகள் வழங்கவும், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளர் இராம.உதயசூரியன் ஆகியோர் முயற்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டதின் விளைவாக,, தமிழக முதல்வர் தலைமையில் இயங்கும் வன உயிரின நலவாரிய குழு கடந்த 2022-ஆண்டு டிசம்பரில் கூடி, மத்திய வனத்துறையின் அனுமதிபெற இத்திட்டத்திற்கான கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
இது சம்மந்தமாக ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர்யாதவ்க்கு எழுதிய கடிதத்தின் காரணமாக, இத்திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்த, மத்திய வனத்துறை இத்திட்டம் சம்பந்தமாக கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதாகவும், அது கிடைத்தவுடன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும்எனவும் தெரிவித்தது.
அதன்படி மத்திய அரசு கேட்ட கூடுதல் தகவல்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு அந்த கோப்பு கடந்த 25.05.2023-அன்று மத்திய வனத்துறைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ எம்பி மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர்யாதவ்க்கு, மீண்டும் எழுதிய கடிதத்தில், இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு மத்திய வனத்துறை அனுமதி பெறுவதற்கு தங்கள் துறை கேட்டிருந்த கூடுதல் தகவல்கள் அடங்கிய கோப்பு தங்கள் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்கி, தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் கடையம் வட்டாரங்களில் வறட்சி நிலவும் பகுதிகள் செழிப்படையவும், அங்கு வாழும் மக்களின் குடிநீர் தேவை நிறைவேறி, பொருளாதாரம் மேம்படவும் விரைந்து அனுமதி வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.