May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் அருகே பழமையான கோவிலை அகற்றும் போது சாமியாடிய பக்தர்கள்

1 min read

Devotees of Samiyadia during the removal of an ancient temple near Bhavoorchatram

7.6.2023
பாவூர்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலைக்காக பழமையான கோவிலை அகற்றியபோது பக்தர்கள் சாமி வந்து ஆடினார்கள்.

நான்குவழிச்சாலை

நெல்லை- தென்காசி நான்கு வழி சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் சாலையோரம் உள்ள மிகப் பழமையான மூனால் முப்புடாதி அம்மன் கோவிலை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கோவிலில் இருந்த சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றவும், கோவிலை ஒட்டி நின்ற மிக பழமையான ஆலமரத்தை அகற்றுவதற்காகவும் தென்காசியில் இருந்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள பீடங்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாமியாட்டம்

அப்போது பெண், ஆண் சாமியாடிகள் திடீரென சாமி ஆடி குறி சொல்ல தொடங்கினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து தூக்கி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் போலீசார் அங்கு கூடியிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் பீடங்களை மாற்றியதோடு பழமையான ஆலமரத்தையும் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலைகளை ஊர் பொதுமக்களின் அனுமதி பெறாமல் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தென்காசிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நவநீதகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எடுத்து செல்லப்பட்ட விக்கிரகங்களை கொண்டு வராததால் ஊர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நேற்று காலையில் எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை இரவு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் ஊருக்கு பொதுவான கட்டிடத்தில் அம்மன் விக்கிரகங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட தொடங்கினர்.
நான்கு வழிச்சாலை பணிகள் தேவையான ஒன்றுதான் இருப்பினும் பழமையான கோவில் மற்றும் ஆலமரங்களை நவநீதகிருஷ்ணபுரத்தில் அகற்றாமல் சாலையில் படர்ந்த ஆலமரத்தின் கிளைகளை மற்றும் அகற்றிவிட்டு நான்கு வழி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் சாலை அமைத்து வரும் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.