June 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தருமபுரியில் அனுமதியின்றி செயல்படும் எல்பிஜி எரிவாயு கிடங்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

1 min read

LPG gas depot operating without permission in Dharmapuri: Court orders Govt to respond

25.6.2023
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அனுமதி இல்லாத கட்டிடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி எரிவாயு கிடங்கு செயல்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எரிவாயு கிடங்கு

சென்னை உயர் நீதிமன்றத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி கிழக்கு பகுதி செயலாளரான கதிரவன் தாக்கல் செய்துள்ள மனுவில், “தருமபுரி மாவட்டம் அரூர் தாலுக்காவில் உள்ள மோப்பிரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எட்டிப்பட்டி அழகிரி நகரில் மாலதி என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேந்தரிடம் பொய்யான முகவரியை அளித்து எரிவாயு கிடங்கு அமைக்க மனு அளித்துள்ளார். இதற்கு ஊராட்சி மன்றத் தலைவரும், வார்டு உறுப்பினர்களிடம் எந்த அனுமதியும் கேட்காமல், மக்களின் வாழ்வாதரத்தை பொருட்படுத்தாமல் கடந்தாண்டு அனுமதி வழங்கி உள்ளார்.

இந்த எரிவாயு கிடங்குக்கு, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பின் இணை தலைமைக் கட்டுப்பாட்டாளரிடம் முறையான அனுமதி பெற்று உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்த விதியை பின்பற்றாமல், எந்தவித உரிமமும் பெறாமல் பஞ்சாயத்து தலைவரின் உதவியுடன் சட்டவிரோதமாக எரிவாயு கிடங்கு கட்டப்பட்டுள்ளது.

12 ஆயிரம் கிலோ எடையுள்ள எல்பிஜி எரிவாயு கிடங்கு சட்டவிரோதமாகத் திறக்கப்பட்டுள்ளது. இதனை, நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தக் கோரி ஜூன் 7-ம் தேதி அனுப்பிய மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமான எரிவாயு கிடங்கின் கட்டுமானத்தை தடுத்து நிறுத்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சசிகுமார், “இந்த எரிவாயு கிடங்கானது அங்கன்வாடி பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிக்கு அருகில் உள்ளது. இதனால், இங்கு பயிலும் மாணவர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 100 வாகனங்கள் சென்று வருவதால் எரிவாயு கிடங்கில் ஏதேனும் விரும்பத்தகாத அசம்பாவித சம்பவம் நடந்தால், பெரும் சேதத்தை ஏற்படுத்தும்” என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.