January 16, 2025

Seithi Saral

Tamil News Channel

நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் மோடி ஒரு தீர்க்கதரிசி

1 min read

Modi is a prophet..BJP making old video go viral

26.7.2023
இந்தியாவில் ஆளும் பா.ஜ.க.வின் அரசாங்கத்திற்கெதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக இரண்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
1984ம் வருடம் மக்களவையில் 2 இடங்கள் மட்டுமே பா.ஜ.க.விற்கு கிடைத்தது. காங்கிரஸ் 404 உறுப்பினர்களை கொண்டு அசுர பெரும்பான்மையுடன் இருந்தது. 2014லிருந்து காங்கிரசின் வீழ்ச்சியும், பா.ஜ.க.வின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. மோடியின் தலைமையில் வளர்ந்து வந்த பா.ஜ.க., 2018ம் வருடம் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் தோற்கடித்தது. இந்த இரண்டையும் மறைமுகமாக குறிப்பிட்டு 2019ல் மோடி பேசியிருந்தார். அவர் பேசியிருப்பதாவது:-

எனது வாழ்த்துக்களை உங்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) தெரிவிக்க விரும்புகிறேன். 2023ல் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் தயாராகுங்கள். சேவை உணர்வால் 2 உறுப்பினர்களாக இருந்த நாங்கள் இங்கே ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம். ஆணவத்தின் விளைவால் 400 இடங்களில் இருந்த நீங்கள் 40 ஆக குறைந்துள்ளீர்கள். இன்று நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
அவர் பேச்சை ரசிக்கும் விதமாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிரிப்பதையும், அவரது கருத்துக்களை ஆமோதிக்கும் விதமாக அவர்கள் மேசையை தட்டி ஓசை எழுப்புவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. அன்று பிரதமர் கருத்து தெரிவிக்கும்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்ற கட்சி தலைவர்களுடன் அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ல், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பல எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜ.க. அரசாங்கம் தோற்கடித்தது. இம்முறை மணிப்பூர் விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வருகிறது. இந்த முறையும் அதுதான் நடக்கும் என்று பாஜகவினர் கூறுகின்றனர். அத்துடன் மோடியின் பழைய வீடியோவை பகிர்ந்து, ‘இன்றைய தீர்மானம் குறித்து மோடி அன்றே சொன்னார்’, என வர்ணிக்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.