பாராளுமன்ற மேல்சபையில் குறுகிய நேரம் விவாதம்-எதிர்க்கட்சிகள் கடும் அமளி
1 min readA short debate in the upper house of the Parliament – the opposition parties are very active
26.7.2023
மணிப்பூர் கலவரம் பற்றி பாராளுமன்ற மேல்சபையில் குறுகிய நேரம் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
மணிப்பூர் விவகாரம்
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பாராளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் முறையிட்டனர். இதனால் 4 தினங்கள் பாராளுமன்றம் முடங்கியது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தன. அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற மேல்சபை மட்டும் சிறிது நேரம் தொடர்ந்து நடந்தது. கடும் அமளிக்கு இடையே மணிப்பூர் பற்றி விவாதிக்க மேல்சபை துணைத் தலைவர் விதி எண் 176-ன் கீழ் சிறிது நேரம் ஒப்புதல் வழங்கினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் கார்கே எழுந்து பேசினார்.
மைக் துண்டிப்பு
அவர் பேசிக் கொண்டு இருந்தபோது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க. எம்.பி. எச்.சிவா எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இதுபற்றி கார்கே பேசுகையில், “நான் பேசும் போது மைக் இணைப்பு துண்டிக்கப்படுவது என்னை இழிவுப்படுத்துவது போல் உள்ளது. இது உரிமை மீறல் ஆகும்” என்றார்.
இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதிஇரானி ஆகியோர் ஆவேசமாக எதிர்த்து பேசினார்கள். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர்… மணிப்பூர் என்று கோஷமிட்டனர்.
அமளி அதிகரித்ததால் மேல் சபையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடிய போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை சபைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கிடையே அமித்ஷா எழுதிய கடிதத்திற்கு கார்கே பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். மணிப்பூர் பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் முதலில் பிரதமர் விளக்கம் அளிப்பதை உறுதி படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.