May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் நடந்த சுற்றுலாப்பயணி கொலையில் மைத்துனர் உட்பட 3 பேர் கைது

1 min read

3 people including brother-in-law arrested in the murder of a tourist in Courtalam

31.7.2023
குற்றாலத்தில் கடந்த 28 ஆம் தேதி தனியார் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மைத்துனர் உட்பட மூன்று பேர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மருந்துக்கடை அதிபர்

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மகன் முருகேசன் (வயது 36) இவர் நாட்டு மருந்து கடை நடத்தி வந்துள்ளார்.இவரும் தாழையத்தைச் சேர்ந்த செல்வம், நாராயணகுமார், தங்கதுரை, ஆகிய நான்கு பேர்களும் இரண்டு பைக்குகளில் கடந்த 27 ஆம் தேதி குற்றாலத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் ஐந்தருவி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி உள்ளனர்.

அன்று மதியம் உணவு வாங்குவதாக கூறி நாராயணகுமார் தங்கதுரை இருவரும் வெளியே சென்று உள்ளனர் திரும்பி வந்து பார்த்தபோது முருகேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அவருடன் வந்த மூன்று நபர்களையும் போலீசார் விசாரணை செய்ய முயன்ற போது செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் செல்வத்தை தொடர்பு கொண்ட போது அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

கைது

அதனைத் தொடர்ந்து குற்றாலம் போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய செல்வத்தை தீவிரமாக தேடி வந்த நிலையில் நாகர்கோவில் பகுதியில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவருடன் குற்றாலம் வந்த மூன்று நபர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்.

விசாரணையில் மூன்று பேரும் சதி திட்டம் தீட்டி முருகேசனை படுகொலை செய்தது தெரியவந்தது. உடனடியாக குற்றாலம் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது;-

பாகப்பிரிவினை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சமாதான புரத்தில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருபவர் சேர்மக்கனி என்பவரது மகன் நாராயணகுமார் (வயது 43) இவர் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த நாட்டு மருந்து கடை உரிமையாளர் முருகேசனின் சகோதரியை திருமணம் செய்து உள்ளார். முருகேசனின் குடும்பத்தில் பாகப்பிரிவினை செய்ததில் சுமார் 60 லட்சத்தை முருகேசன் அவரது தாய் மற்றும் சகோதரி கலா ரூபாய் 15 லட்சம் பங்கு வைத்துக் கொண்டனர். இதில் தாயாரின் பணத்தை சகோதரியின் கணவரான நாராயணகுமாரிடம் கொடுத்து வைத்துள்ளார். முருகேசன் தனது பணத்தை செலவு செய்து விட்டதால் தன்னிடம் கொடுத்து வைத்துள்ள தாயாரின் பங்கையும் வாங்கி விடுவாரோ என்று நாராயண குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாராயணகுமாரின் ஸ்டிக்கர் கடைக்கு வந்த ஆட்டோ டிரைவர் வடக்கு தாழையத்தைச் சேர்ந்த அன்னராஜா என்பவரது மகன் தங்கதுரை (வயது 28) தாழையூத்து காசிராஜன் என்பவரது மகன் செல்வம் (வயது 27) ஆகியோருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. மூவரும் சேர்ந்து முருகேசன் பழைய கார் வாங்குவது போன்று அழைத்துச் சென்று பல இடங்களுக்கும் சுற்றியுள்ளனர்.
பாலபாக்கியா நகரில் உள்ள ஒரு விடுதியில் வைத்து முருகேசனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்
ஆனால் அது நிறைவேற வில்லை.

அதனைத் தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி ஐந்தருவி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர்.குற்றாலத்தில் உள்ள அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு வந்த நிலையில் 28ஆம் தேதி மதியம் முருகேசனை செல்வம் அறிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதற்கு நாராயணகுமார், தங்கதுரை உடந்தையாக இருந்துள்ளனர்.

மேலும் கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள், கொலையாளி தப்பிச் சென்ற பைக் ஆகியவற்றை போலீஸார் கடையநல்லூர் பகுதியில் கைப்பற்றினர் பணத்திற்காக சொந்த மைத்துனரே சதித்திட்டம் தீட்டி கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து போலீசார் கைது செய்த மூன்று நபர்களையும் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார் அதன்படி மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.