September 18, 2024

Seithi Saral

Tamil News Channel

அயோத்தி ராமர் கோவிலில் ராமர் சிலை வடிக்க கர்நாடகாவின் அரியவகை கருங்கல் தேர்வு

1 min read

A rare black stone from Karnataka was selected for the Ram idol in Ayodhya Ram temple

31.7.2023
அயோத்தி ராமர் கோவிலுக்’கு ராமர் சிலை வடிக்க கர்நாடகாவின் அரியவகை கருங்கல் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ராமர்கோவில்

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், 3 தளங்களாக கோவில் அமைகிறது. கோவில் கட்டுமானத்தில் மார்பிள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மகாராஷ்டிரா தேக்குகளால் கோவில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. 152 தூண்களில் 4500 விக்ரகங்கள் செதுக்கப்பட்டு வருகின்றன. தூண்களை செதுக்கும் பணியில் கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 40 கைவினைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தூணிலும் 24 விக்ரகங்கள் செதுக்கப்படுகின்றன. 5 வயதான குழந்தை வடிவ ராமர் சிலை, முதல் தளத்தில் நிறுவப்படும்.

சிலை

கர்ப்பகிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் சிலையின் உயரம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி கருவறையில் 5 அடி உயரத்தில் நிற்கும் நிலையில் வில்-அம்பு தாங்கிய தோற்றத்தில் ராமர் சிலை அமைய உள்ளது. கருவறையில் வைக்கப்படும் சிலை என்பதால் எதிர்மறை எண்ணங்களை அகற்றி, ஐஸ்வர்யம் பெருக செய்து நேர்மறை அதிர்வுகளை தரக்கூடிய புனித கற்களை பயன்படுத்த சிற்பிகள் திட்டமிட்டனர். இதற்காக ஏற்கனவே ராமர் சிலை வடிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் கற்கள் தேர்வு செய்யப்பட்டன.

நேபாளத்தின் காளி கண்டகி ஆற்றில் இருந்து சுமார் 7 அடி நீளமும், 350 டன் எடையும் கொண்ட 2 சாளக்கிராம கற்கள் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் ராமர் சிலை வடிக்க முதலில் திட்டமிடப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ண சிலா எனப்படும் அரியவகை கருங்கல்லும் கொண்டு வரப்பட்டு உள்ளது. சாளக்கிராம கல்லை முதலில் தேர்வு செய்த சிற்பிகள் தற்போது அதை தவிர்த்து கிருஷ்ணசிலா கருங்கல்லில் சிலை வடிக்க உள்ளனர். ராமர் சிலைக்கான கருங்கல் கர்நாடகாவின் நெல்லிகரு கிராமத்தில் இருந்து கடந்த மாதம் அயோத்திக்கு எடுத்து செல்லப்பட்டது. நெல்லிக்கருங்கல் என்று அழைக்கப்படும் இந்த பாறை , தனித்துவமான பண்புகளைக் கொண்டது. பல பிரபலமான சிற்பங்கள் இதில் வடிக்கப்பட்டு உள்ளன. அவை துங்கபத்ரா ஆற்றின் கரையில் உள்ள ஒரு சிறிய மலையில் இருந்து நிபுணர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ராமர் சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண்யோகிராஜ் வடிக்கிறார். இதற்கான பணியை அவர் தொடங்கி உள்ளார். சிற்பி அருண் யோகிராஜ் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்பிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் அமர்ந்த நிலையில் ஆதிகுரு சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலை, இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 30 அடி உயர சிலை போன்ற சிலைகளை வடித்தவர். மைசூரில் உள்ள சிற்பக் குடும்பத்தைச் சேர்ந்த அருண் யோகிராஜின் தந்தை யோகிராஜ் மற்றும் அவரது தாத்தா பசவண்ண ஷில்பி ஆகியோர் புகழ்பெற்ற சிற்பிகள். அவர்கள் மைசூர் அரண்மனை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் சிலைகளை செதுக்கினர். அருண் யோகிராஜ் தனது படைப்புகளுக்காக 10-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2 அடி நீள சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.