ஜெய்ப்பூர்- மும்பை ரெயிலில் 4 பேர் சுட்டுக்கொலை-ஆர்.பி.எப். வீரர் வெறிச்செயல்
1 min read4 people shot dead in Jaipur-Mumbai train -RPF Player frenzy
31.7.2023
ஜெய்ப்பூர்- மும்பை ரெயிலில் 4 பேரை ஆர்.பி.எப். வீரர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில்
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பைக்கு தினமும் ஜெய்ப்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று மதியம் 2 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்டது. ரட்லம், வதோதரா, சூரத் வழியாக அந்த ரெயில் மும்பைக்கு வந்து கொண்டு இருந்தது. 17 மணி நேர பயணத்தை நிறைவு செய்ய நெருங்கி கொண்டு இருந்த நிலையில் அதிகாலை 5.20 மணிக்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அந்த ரெயில் வாபி-சூரத் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. பல்கர் எனும் ரெயில் நிலையத்தை கடந்தபோது பி-5 ரெயில் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ்காரர் சேத்தன் சிங்கிற்கும், அவரது உயர் அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் திக்ராம் மீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
சுட்டுக்கொலை
இன்று அதிகாலை ஏற்பட்ட மோதலில் சேத்தன் சிங் கண் இமைக்கும் நேரத்துக்குள் தனது துப்பாக்கியை எடுத்து சுட தொடங்கினார். தானியங்கி துப்பாக்கி வகையை சேர்ந்த அந்த துப்பாக்கியில் இருந்து சரமாரியாக குண்டுகள் பாய்ந்தன. இதில் ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் திக்ராம் மீனா மீது குண்டுகள் பாய்ந்தன. அவர் பயங்கர அலறல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
துப்பாக்கிச்சூடு சத்தம் மற்றும் அலறல் சத்தம் கேட்டு பி.5 பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். அதற்குள் போலீஸ்காரர் சேத்தன் சிங் அந்த பெட்டியில் இருந்து வெளியேறி தப்பி ஓடினார். அருகில் இருந்த பெட்டிக்குள் சென்ற அவரை பயணிகள் மடக்கினார்கள்.
இதையடுத்து துப்பாக்கியை காட்டி போலீஸ்காரர் சேத்தன் சிங் மிரட்டினார். ஒரு பயணியை அவர் பிணை கைதி போல் பிடித்துக்கொண்டு, “அருகில் வந்தால் இவரை சுட்டுக்கொன்று விடுவேன்” என்றும் மிரட்டினார். இதனால் பயணிகள் ஒரு நிமிடம் செய்வது அறியாமல் திகைத்தனர். இதற்கிடையே அவரை பயணிகள் பிடிக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மீண்டும் தனது தானியங்கி ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். இதனால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். என்றாலும் 3 பயணிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்களும் ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க சரிந்தனர். ஓடும் ரெயில் பெட்டிக்குள்ளேயே அந்த 3 பயணிகளும் இறந்தனர். இதனால் அந்த ரெயில் பெட்டி முழுவதும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
கண் இமைக்கும் நேரத்துக்குள் 4 பேரை அடுத்தடுத்து அந்த ரெயில்வே பாதுகாப்பு வீரர் சுட்டுக் கொன்றதால் மற்ற பயணிகள் உதவி கேட்டு அலறினார்கள். இதனால் அருகில் உள்ள பெட்டிகளில் இருந்த பயணிகளும் ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் ஓடும் ரெயில் முழுவதும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸ்காரர் சேத்தன் சிங் தப்பி செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டார். பல்கர் ரெயில் நிலையத்தை கடந்து தகிசர் ரெயில் நிலையம் அருகில் அந்த ரெயில் மெல்ல சென்று கொண்டிருந்தபோது சேத்தன் சிங் ரெயில் பெட்டிக்குள் இருந்த சங்கிலியை பிடித்து இழுத்தார்.
கைது
ரெயில் நின்றதும் அவர் துப்பாக்கியுடன் ரெயிலில் இருந்து இறங்கி மீரா சாலையில் ஓட்டம் பிடித்தார். ஆனால் அதற்குள் மற்ற ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். சாமர்த்தியமாக அவரை பிடித்து கைது செய்தனர். அவர் வைத்து இருந்த துப்பாக்கி உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியது பற்றி போலீஸ்காரர் சேத்தன் சிங்கிடம் எந்த பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார். அவரை போலீசார் போரிவலி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் போலீஸ்காரர் சேத்தன் சிங் கடந்த சில தினங்களாக மனநல பாதிப்புடன் இருந்தது தெரிய வந்துள்ளது. மும்பையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் பல்கர் ரெயில் நிலையம் அருகே ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போதுதான் துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் பீதியுடன் அதே ரெயிலில் மும்பை வந்து சேர்ந்தனர். ரெயிலுக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கண்டிவலி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு வீரரே பயணிகளை சுட்டுக்கொன்று இருப்பது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை ரெயில்வே போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.