தென்காசி மாவட்டத்தில் ரூ.400 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்
1 min read
400 crore development projects in Tenkasi district
19.8.2023
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தலைமையில், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஆகியோர் கொண்ட குழுவினர், மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் முன்னிலையில், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
பின்னர் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தது. தென்காசி அரசு மருத்துவமனையில் ரூ.22 கோடியில் கட்டப்படும் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் இன்னும் 1½ ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் என்ற வகையில் ரூ.15 கோடி செலவில் தென்காசியில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது.
தென்காசியில் காவல்துறை தலைமை அலுவலகம் ரூ.54 கோடி செலவில் கட்டப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ளது. தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில்
டாக்டர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தென்காசி மாவட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.400 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சில பணிகள் முடிவடைந்து விட்டன. அவை ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும். சில பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.