புளியரை வழியாக கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றிச்செல்ல தடை நீட்டிப்பு
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2023/09/கனரக-வாகனம்.jpg)
Extension of ban on transportation of mineral resources by heavy vehicles through Puliarai
27.9.2023
தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் மணல் ஜல்லி கற்கள் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச்செல்லும் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடையை நீட்டித்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கனரக வாகனம்
கேரள மாநிலம் தென்மலையில் செயல்பட்டு வரும் இந்திய டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி யிருந்ததாவது:-
கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்கி வருகிறோம் இந்நிலையில் கேரளாவில் பெரும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகள் சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல் மற்றும் மணல் குவாரி பணிகளுக்கு தடை உள்ளது. ஆனால் கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் கட்டமைப்பு கட்டுமான பணிகள் சாலை பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான கிராவல் மண், ஜல்லிக்கற்கல், எம்சாண்ட் மற்றும் மணலுக்கு தமிழகத்தையே சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. தமிழகத்தின் உதவி இல்லாமல் கேரளாவில் உள்கட்டமைப்பு பணிகளை செய்ய முடியாது.
இந்த பொருட்களை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வரும்போது ஜிஎஸ்டி லேபிள் போக்குவரத்து அனுமதியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர், வருவாய்த்துறையினர், புளியரை காவல் ஆய்வாளர் மற்றும் கனிமவள அதிகாரிகள் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கின்றனர். இதனால் இந்தச் சோதனை சாவடி வழியாக இயக்கப்படும் லாரி டிரைவர்களை நம்பியுள்ள பல ஆயிரம் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து பத்து சக்கர வாகனங்களுக்கு மேற்பட்ட லாரிகளில் புளியரை சோதனை சாவடி வழியாக கனிமங்களை கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இடைக்கால தடை
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது லாரிகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர், உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் அத்துடன் புளியரை சோதனை சாவடியில் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளுக்கான கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி தென்காசி புளியரை சோதனை சாவடியில் 10 சக்கரத்திற்கும் மேற்பட்ட லாரிகளுக்கான கட்டுப்பாடுகளுக்கு விதித்த இடைக்கால தடையை நீடித்து உத்தரவிட்டார்.
அதேபோல இந்த வழக்கின் விசாரணையும் 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.