தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிநாளை ஆழ்வார்குறிச்சி வருகை
1 min readTamil Nadu Governor RN Ravi will visit Alwarkurichi tomorrow
27.9.2023
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு நாளை காலை 10.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து 12.15 மணிக்கு காரில் புறப்படும் கவர்னர் ஆர்.என்.ரவி 2 மணிக்கு குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவு அருந்தும் கவர்னர் பிற்பகல் 3.30 மணிக்கு குற்றாலம் கே.ஆர்.ரிசாட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் அங்கிருந்து ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும் கவர்னர் அங்கு 4.55 மணி அளவில் நடைபெறும் கூட்டத்தில் பாரம்பரிய பானை தயாரிப்பாளர்கள் மற்றும் பானை வாங்குபவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
மாலை 5.20 மணிக்கு சிவசைலம் அவ்வை ஆசிரமத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி செல்கிறார். 6 மணிக்கு சிவசைலத்தில் உள்ள சிவசைலபதி கோவிலுக்குச் சென்று கவர்னர் வழிபாடு நடத்துகிறார். 6.30 மணிக்கு கோவிந்தப்பேரி ஸோஹோ கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு இரவு கவர்னர் தங்குகிறார்.
நாளை மறுநாள் (29ம் தேதி) காலை 9.15 மணிக்கு கோவிந்தபேரியில் இருந்து நெல்கட்டும்செவலுக்கு கவர்னர் புறப்பட்டு 10.30 மணிக்கு அங்கு சென்று பூலித்தேவர் மாளிகை, பச்சேரி மாவீரன் ஒண்டி வீரன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 11.30 மணிக்கு ராஜபாளையம் ராம்கோ விருந்தினர் மாளிகைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி செல்கிறார். பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு இரவு மதுரைக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டத்திற்கு இன்று வருகை தருவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.