வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு; 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – ஐகோர்ட் உறுதி
1 min readVachathi rape case; Relief of Rs.10 lakh each to 18 women – high Court confirmed
29.9.2023
வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
வாச்சாத்தி வன்கொடுமை
தருமபுரி வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அவற்றை தள்ளுபடி செய்ததோடு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாகக் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு வழக்கறிஞர் இளங்கோ அளித்த ஊடகப் பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 1992-ல் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளார். தருமபுரி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் ரூ.5 லட்சம் அரசாங்கமும், ரூ 5.லட்சம் பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடமிருந்து வசூலித்தும் தர வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.
அப்போதைய தருமபுரி ஆட்சியர், எஸ்.பி., வன அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார். இவை மட்டுமல்லாது அப்பகுதியில் தேவைப்படும் மக்கள் நலப் பணிகளை செய்துதர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்” என்றார்.
இந்த வழக்கின் முழு விவரம் வருமாறு:-
தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 1992-ம் ஆண்டு சுமார் 655 பேர் வசித்து வந்தனர். இவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் வனத்தை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
வாச்சாத்தி கிராமப் பகுதிகளில் கடந்த 1992-ம் ஆண்டு ஜுன் 20-ம் தேதி சந்தனமரம் வெட்டிக் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாகக் கூறி 155 வனத்துறையினர், 108 போலீஸார், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய கூட்டுக் குழுவினர் சோதனையிட்டனர். வீடு,வீடாக நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த சில வீடுகள் மற்றும் ஏரிப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அங்கிருந்த 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
வன்கொடுமை
சோதனை நடவடிக்கையின்போது கிராம மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 18 மலைவாழ் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அரூர்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அப்போதைய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்த சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும் உரிய விசாரணை ஏதும் நடைபெறவில்லை எனக்கோரி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் 1993-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 1995-ம்ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட வனத்துறையைச் சேர்ந்த 155 பேர், போலீஸார் 108 பேர், வருவாய்துறையினர் 6 பேர் என மொத்தமாக 269 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 1996-ல் சிபிஐ கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவை மற்றும் கிருஷ்ணகிரி நீதிமன்றங்களில் வழக்கு நடத்தப்பட்டு, 2008-ல் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தருமபுரி நீதிமன்றம்
வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தீர்ப்பு அளித்தார்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டிலேயே ஒரு வழக்கில் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்காக இது இருந்ததால் நாடு முழுவதும் பெரும் அதிர்வை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
தொடர்ந்து இவ்வழக்கு சம்பந்தமான இடங்கள் மற்றும் மக்களிடையே நேரில் விசாரணை செய்யவும் முடிவு செய்து அதன்படி கடந்த மார்ச் 4-ம் தேதி வாச்சாத்தி கிராமத்துக்கு நீதிபதி பி.வேல்முருகன் வருகை தந்தார்.
சம்பவத்தில் தொடர்புடையப் பகுதிகளாக கருதப்படும் பழங்குடிகள் தொடக்கப்பள்ளி, ஏரிப்பகுதி, ஆலமரம், தண்ணீர் தொட்டி, மலைப்பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து பேசினார். இந்நிலையில் மேல் முறையீட்டு வழக்கின் மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.