தென்காசி மாவட்டத்தில் தடையை மீறி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் – 215 பேர் கைது
1 min read
Prohibition-defying Hindu front protest in Tenkasi district – 215 people arrested
13.10.2023
தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் அருகே உள்ள அச்சங்குன்றம் கிராமத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்ட வலியுறுத்தி தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் சங்கரன்கோவில் ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 215 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம்,
வீ.கே.புதூர் அருகே உள்ள அச்சங்குன்றம் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து வேறு ஒரு இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அங்கு தற்போது இயங்கி வருகிறது. பழைய பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு சர்ச் கட்ட ஒரு தரப்பினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கல்வியாண்டில் பள்ளியில் படித்த 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் அந்த பள்ளியில் எங்கள் குழந்தைகளின் கல்வியை தொடர மாட்டோம் எனக்கூறி மாற்றுச் சான்றிதழ்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீ.கே. புதூர் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் அச்சங்குன்றத்திற்கு புதிய அரசு பள்ளி அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நீண்ட நாட்களாக அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததை கண்டித்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆலங்குளம் மற்றும் கடையநல்லூரில் நேற்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து தடையை மீறி இந்து முன்னணி தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அதன்படி கடையநல்லூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற போது புளியங்குடி காவல்துறை கண்காணிப் பாளர் அசோக் தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட துணை தலைவர் இசக்கி முத்து, மாவட்ட செயலாளர் உலகநாதன், முருகன், இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் குருசாமி, பாஜக மாநில பொதுக்குழுஉறுப்பினர் மாரியப்பன்,
முருகன் கார்த்திகேயன், மாவட்டச் செயலாளர் குளத்தூரான் , தென்காசி நகர தலைவர் நாராயணன்,
கடையநல்லூர் நகர பொதுச்செயலாளர் குருசாமி, கடையநல்லூர் ஆட்டோ முன்னணி தலைவர் காளிராஜ், புளியங்குடி நகரத் தலைவர் குரு சுதன்,
காளிமுத்து, கார்த்திக் உட்பட 40 பேர்களை கைது செய்து அருகில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
சங்கரன்கோவில் தேரடி திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மாநில துணைத்தலைவர்
வி.பி.ஜெயக்குமார் கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சங்கரன்கோவில் நகர தலைவர் செல்வம், பொருளாளர் விஜய் பாலாஜி, உள்ளிட்ட 32 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
இதைப்போலவே ஆலங்குளம் பகுதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியைச் சார்ந்த பெண்கள் உட்பட 143 இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி நடத்திய இந்த ஆர்ப்பாட்டத் தினால் அந்த பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.