May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

செங்கம் அருகே லாரி மீது மோதி 7 பேர் பலி

1 min read

7 people were killed in a collision with a truck near Sengam

15.10.2023
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காரின் டயர் வெடித்ததால் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருபெண் படுகாயமடைந்தார். அமாவாசையொட்டி கோயிலுக்கு சென்று திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாராஜபுரம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சனிக்கிழமை அன்று மகாளய அமாவாசையொட்டி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை பெங்களூருவுக்கு புறப்பட்டனர். காரில் 2 சிறுவர்கள், 2 பெண்கள், 4 ஆண்கள் பயணம் செய்தனர். காலை 9 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் அருகே புதுச்சேரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காரின் டயர் வெடித்துள்ளது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது.
காரில் இருந்த 2சிறுவர்கள் உள்பட 7பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு பெண் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் செங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரின் இடுபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கார் நொறுங்கி கிடந்ததால் அதில் இருந்த சடலங்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து செங்கத்தில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, காரை உடைத்து அதில் இருந்த சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 சிறுவர்கள், 1 பெண், 4 ஆண்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அணணாதுரை எம்பி, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, டிஎஸ்பி தேன்மொழி, தாசில்தார் பி.முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பெண்ணை நேரில் பார்த்து ஆறுதல் கூறியதோடு தீவிர சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டனர்.
மேலும் இந்த விபத்து காரணமாக பெங்களூரு-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. விபத்தில் சிக்கிய கார், லாரியை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே விபத்தில் இறந்தவர்களின் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கோயிலுக்கு சென்று திரும்பியபோது லாரி மீது கார் மோதி 7பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.