அம்பை அருகே மின்வேலியில் சிக்கி தந்தை மகன் பலி – 3 பேர் கைது
1 min read
Father and son killed by electric fence near Ambai – 3 arrested
30.10.2023
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை மகன் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேர்களை கைது செய்தனர்.
தந்தை மகன்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி பேச்சிமுத்து (வயது 55) இவரது மகன் பேரின்பராஜ் (வயது 28) இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள தங்களது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளனர்.
அப்போது வனவிலங்குகளை வேட்டையாட மின்கம்பத்தில் இருந்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து அமைத்திருந்த மின் வேலியை எதிர்பாராத விதமாக மிதித்த இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார், மற்றும் மணிமுத்தாறு போலீசார் அம்பை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மணிமுத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வேம்பு என்பவரது மகன் மதிவாணன் (வயது 35) ஆறுமுகம் என்பவரது மகன் பெரியசாமி (வயது 32) முத்தையா என்பவரது மகன் பாலசுப்பிரமணியன் (வயது 40) ஆகிய மூவரும் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து மின் திருட்டு மற்றும் மரணம் விளைவிக்கும் குற்றம் புரிதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது பற்றி தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி பேச்சிமுத்து மற்றும் அவரது மகன் பேரின்ப ராஜ் ஆகியோரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு அவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.