கேரள குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டொமினிக் மாமியார்
1 min readDominic’s mother-in-law who luckily survived the Kerala blasts
31.10.2023
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியாகினர். குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் போலீசில் சரண் அடைந்தார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 29 மணி நேரம் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில் குண்டு வெடிப்பு சதி திட்டத்திற்கு திட்டமிட்டது, அதன் செயல்படுத்தியது, குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிபொருட்களை வாங்கி தயாரித்தது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் விசாரணையில் டொமினிக் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து தீப்பிடித்து எரிந்த காட்சிகள் உள்ளிட்டவைகளையும் விசாரணையின்போது காண்பித்துள்ளார். விசாரணையின்போது தெரிவித்த தகவல்கள் மற்றும் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குண்டு வெடிப்பு சதியை நிறைவேற்றியது டொமினிக் மார்ட்டின் என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்தனர்.
வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக அவர் கொச்சி பகுதியில் 50 பட்டாசுகள் மற்றும் 8 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவைகளை வாங்கி இருக்கிறார். மேலும் யூடிப்பை பார்த்து சிம்பிள் சர்க்கியூட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய ரிமோட் தயார் செய்திருக்கிறார்.
அந்த ரிமோட்டை பயன்படுத்தியே வெடி குண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறார். ரிமோட்டை பயன்படுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்த வீடியோவையும் டொமினிக் மார்ட்டின் தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அதனையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் டொமினிக் மார்ட்டினின் மாமியார் கலந்து கொண்டிருக்கிறார். அவர் பங்கேற்கும் தகவல் அறிந்த டொமினிக் மார்ட்டின், அவரை பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவர் டொமினிக் மார்ட்டின் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அவரது மாமியார் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார். இருந்த போதிலும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்காமல் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.